அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த மழை: ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த மழை: ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2019 4:30 AM IST (Updated: 22 Aug 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அரியலூர்,

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர். அதுமட்டுமின்றி வறட்சி நிலவியதால் குடிநீருக்காக கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பகல், இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று பகல் நேரத்தில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பெரம்பலூரில் நேற்று அவ்வப்போது இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மாலையில் மழை பெய்ததால் வேலைக்கு சென்று வீடு திரும்பிய ஆண், பெண்கள் குடை பிடித்தவாறு வேகமாக நடந்து சென்றனர். மேலும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். மழையால் சாலையில் மழைநீர் கரை புரண்டு ஓடியது.

சுற்றுச்சுவர் இடிந்தது

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் ஏரி, குட்டைகள் நிரம்பி வருவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பஞ்சம் தீர்ந்து வருகிறது. மேலும் பெரம்பலூர் வெள்ளந்தாங்கியம்மன் ஏரியில் மாவட்ட சமூக நல கூட்டமைப்பு சேர்ந்தவர்கள் பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் தூர்வாரியதால், தற்போது அந்த ஏரிக்கு மழைநீர் வந்த வண்ணம் உள்ளது.

நேற்று முன்தினம் பெய்த மழையால் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தின் வளாக சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. பெரம்பலூர் சங்குப்பேட்டையில் பிச்சை என்பவரது குடிசை நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு இடிந்து விழுந்தது. அப்போது பிச்சை தனது குடும்பத்தினருடன் வெளியே ஓடி வந்ததால் உயிர் தப்பினர்.

மழை அளவு

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பெரம்பலூர்-38, செட்டிகுளம்-32, பாடாலூர்-21, அகரம்சீகூர்-70, லப்பைக்குடிகாடு-60, புது வேட்டக்குடி-10, எறையூர்-21, கிருஷ்ணாபுரம்-4, தழுதாழை-34, வி.களத்தூர்-22, வேப்பந்தட்டை-38.

இதே போல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

அரியலூர்-73, ஜெயங்கொண்டம்-48.6, செந்துறை-38.6, திருமானூர்-3. அரியலூர் மாவட்டத்தில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது.

வீணாக வெளியேறிய தண்ணீர்

அரியலூரில் கடந்த சில நாட்களாகவே பெய்த மழையால் பள்ளேரி நிரம்ப தொடங்கி உள்ளது. ஆனால் அந்த ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன் குடிமராமத்து பணிக்காக வாகனங்கள் வந்து செல்வதற்கு ஏரியில் வெட்டிய கரை பகுதி சீரமைக்கப்படாததால், அதன் வழியாக கடந்த 2 நாட்களாக ஏரி நீர் வெளியேறி வருகிறது. அந்த கரை பகுதியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைகாரணமாக அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள கண்மாய், ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story