மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் வழிபாடு ஏராளமான பெண்கள் பங்கேற்பு


மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் வழிபாடு ஏராளமான பெண்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Aug 2019 10:30 PM GMT (Updated: 21 Aug 2019 9:03 PM GMT)

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

இங்கு 10 நாட்கள் நடக்கும் மாசிக்கொடையை அடுத்து ஆவணி மாதம் நடக்கும் அஸ்வதி பொங்கல் வழிபாடு முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இந்த ஆண்டின் அஸ்வதி பொங்கல் வழிபாடு நேற்று முன்தினம் சுமங்கலி பூஜையுடன் தொடங்கியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அஸ்வதி பொங்கல் வழிபாடு

2-ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு தேவி பாராயணம் மற்றும் பஜனை, 9 மணிக்கு நாதஸ்வர இன்னிசை ஆகியவை நடந்தது. 11.30 மணிக்கு அஸ்வதி பொங்கல் வழிபாடு நடந்தது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் மண்டைக்காட்டில் குவிந்த னர். அதைதொடர்ந்து பெண்கள் 5004 பானைகளில் பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர்.

தளவாய்சுந்தரம்

பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அன்னதானத்தை தமிழக அரசின்டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். குமரி மாவட்ட கோவில்களில் இணை ஆணையர் அன்புமணி, மேலாளர் ஜீவானந்தம், தந்திரி மகாதேவரு அய்யர், மேல்சாந்தி சட்டநாதன், ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன், வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா, மேற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் ஜாண்தங்கம், கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சிவசெல்வராஜன் மற்றும் இந்து சேவா சங்கம், தேவி சேவா சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் இன்று (வியாழக்கிழமை) மாலை திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 

Next Story