காஷ்மீர் பிரச்சினைக்காக தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


காஷ்மீர் பிரச்சினைக்காக தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 22 Aug 2019 11:15 PM GMT (Updated: 22 Aug 2019 5:20 PM GMT)

காஷ்மீர் பிரச்சினைக்காக தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தஞ்சாவூர்,

பா.ஜ.க சார்பில் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான தேர்தல் பயிற்சி முகாம் தஞ்சையில் நேற்று நடந்தது. இந்த பயிற்சி முகாமிற்கு பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பொறுப்பாளர்கள் எம்.எஸ்.ராமலிங்கம், திருமலைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயிற்சி முகாமை முன்னாள் மத்திய மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் தொடங்கி வைத்து பேசினார். இதில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், மாவட்ட தலைவர் பண்ணைவயல் இளங்கோ, பொதுச்செயலாளர் ஜெய்சதீஷ், செயலாளர் உமாபதி, நகர தலைவர் விநாயகம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பேட்டி

முன்னதாக பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊழலுக்கு எதிரான கட்சி பா.ஜ.க. எந்த வகையிலும் ஊழல் இந்த நாட்டில் புரையேறி போய் விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிற கட்சி. அதுமட்டுமல்ல 5 ஆண்டுகள் எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் ஆட்சி செய்து மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் ஆட்சி. ரபேல் ஊழல் என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினர். ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை.

ப.சிதம்பரம் மீது ஒன்றன் மீது ஒன்றாக பல வழக்குகள் சேர்ந்து உள்ளது. ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி ஆகியோர், ப. சிதம்பரத்துடன் இருக்கிறோம் என்கிறார்கள். இருக்கத்தானே செய்வார்கள். ஊழல், ஊழலோடு தான் இருக்கும். அவர்களின் துணையோடு தான் ப.சிதம்பரம் ஊழல் செய்து கொண்டு இருந்தார். ஊழல் செய்வதற்காகத்தான் அவர்கள் ஆட்சி நடத்திக்கொண்டு இருந்தார்கள். கட்சியே ப.சிதம்பரத்துக்கு பின்னால் நிற்கிறது என்றால், நின்றுதான் ஆக வேண்டும். ஊழல் வாதிக்கு, ஊழல் கட்சி நின்று தான் ஆக வேண்டும்.

வீட்டை பூட்டக்கூடாது

கார்த்தி சிதம்பரம் தமிழிசைக்கு சட்டம் என்ன தெரியும் என்கிறார்?. சட்டம் குறித்து எல்லாம் எனக்கு தெரியும். சம்மன் வந்தால் அதை எதிர்கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது தெரியும். ஜாமீன் நிராகரிக்கப்பட்டால் அதன் மூலம் மேல்முறையீடு செய்தாலும், அதில் நமக்கு கால அவகாசம் கொடுக்கவில்லை என்றால், நாம் விசாரணைக்கு அழைக்கப்படுவோம் என்பதும் அல்லது கைது செய்யப்படலாம் என்பதும் எனக்கு தெரியும். அதிகாரிகள் வந்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வீட்டை பூட்டிக்கொண்டு இருக்கக்கூடாது என்பதும் எனக்கு தெரியும்.

ஊழல் செய்து விட்டு அதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பது எங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. சட்டத்தை மீறி, அதிகாரிகள் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து போகலாமா? என்று எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள். வீட்டை ஏன் பூட்ட வேண்டும்? பூட்டினால் அதிகாரிகள் கடமையை செய்ய வேண்டாமா? அவர்கள் செய்தது சரியா? என்பது விவாதத்துக்குரியது. ஆனால் ஏன் நீங்கள் வீட்டை பூட்டினீர்கள்?.

பழிவாங்கல் இல்லை

ப.சிதம்பரம் கைது எந்த பழிவாங்கல் நடவடிக்கையும் இல்லை. அதிகாரப்பூர்வமாக அவர்கள் தவறு செய்து இருக்கிறார்கள். அவர்கள் துறையை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள். அவரிடம் விசாரணை நடக்கிறது. விசாரணை நடக்கட்டும். ஊழல் செய்யவில்லை என்றால் வெளியே வரட்டும்.

தனிநபர் ஒருவரின் விருப்பத்துக்காக இந்த கைது நடைபெறவில்லை. எதிர்க்கட்சிகள் அப்படித்தான் சொல்வார்கள். ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொள்ள முடியாமல் பா.ஜ.க. மீது பழிபோடுகிறார்கள். மற்ற ஆட்சி வரும்போது கைது செய்யப்பட்டால் பழிவாங்கல் நடவடிக்கை என்று தான் சொல்வார்கள்.

தாக்கத்தை ஏற்படுத்தாது

காஷ்மீர் பிரச்சினைக்காக டெல்லியில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இது தோல்வி அடையக்கூடிய ஆர்ப்பாட்டம். இந்திய வரலாற்றில் தி.மு.க. தனிமைப்படுத்தக்கூடிய ஆர்ப்பாட்டம். மக்கள் இதனை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தி.மு.க. தொண்டர்கள் கூட இதை விரும்பவில்லை. அவர்கள் வரலாற்று பிழையை செய்கிறார்கள். சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக தி.மு.க. இருக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு என்ன அவசியம்?. குடும்ப வாரிசுகளை காப்பாற்றுவதற்காக, இங்கு குடும்ப வாரிசுகளை வைத்து கட்சி நடத்தும் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துவது எந்த விதத்திலும் எந்த தாக்கத்தையும், இந்திய அரசியலிலும், காஷ்மீர் அரசியலிலும் ஏற்படுத்தப்போவது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story