6 பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கலா? போலீசார் அதிரடி சோதனை


6 பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கலா? போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 24 Aug 2019 4:00 AM IST (Updated: 24 Aug 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க இலங்கையில் இருந்து வந்த 6 பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கி உள்ளனரா? என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

கோவை,

இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்புகளிடம் கோவையை சேர்ந்த இளைஞர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு இருப்பதை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதையடுத்து கடந்த ஜூன் மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையை சேர்ந்த 6 பேரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து நடத்திய விசாரணையில் கோவையை சேர்ந்த முகமது அசாருதீன் (வயது 32), ஷேக் இதயத்துல்லா (37) ஆகியோருக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் இருவரும் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அதுபோன்று கோவையில் உள்ள சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி) போலீஸ் அதிகாரிகள் கோவை தெற்கு உக்கடம் அன்புநகரை சேர்ந்த ஷாஜகான், முகமது உசேன், ஷேக் சபியுல்லா ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தி, பென்டிரைவ், செல்போன்கள் உள்பட பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்கள் என்பதும், பயங்கரவாத கருத்துகளை பரப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சந்தேகப்படும் நபர்களின் சமூக வலைத்தளங்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர்-இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் தலைமையில் இலங்கையை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் என்று மொத்தம் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவியதாகவும், அவர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க கோவையில் பதுங்கி இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் தமிழக போலீசாருக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத் தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குறிப்பாக கோவை மாவட்டம் முழுவதும் அலார்ட் விடுக்கப்பட்டது. மாநகர பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. கோவையில் உள்ள அனைத்து கோவில்கள், ஆலயங்கள், மசூதிகளுக்கும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையம், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்பட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மாநகர பகுதியில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, வெளியூர்களில் இருந்து வந்த அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டன. சந்தேகத்துக்கு இடமான பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், மோப்பநாய் பிரிவு போலீசாரும் சோதனை மேற்கொண்டனர்.

இதற்கிடையே தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி நேற்று முன்தினம் இரவு கோவை வந்தார். பின்னர் அவர் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். அத்துடன் இரவு முழுவதும் விடிய விடிய தீவிர கண்காணிப்பு பணியிலும் போலீசாருடன் இணைந்து அவர் ஈடுபட்டார்.

மேலும் கோவைக்கு நேற்று கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். கோவைப்புதூரில் உள்ள சிறப்பு காவல்படையில் இருந்து 242 போலீசாரும், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து 121 போலீசாரும் கோவை வந்தனர். அதுபோன்று சென்னையில் இருந்து துப்பாக்கி ஏந்திய 80 கமாண்டோ படை வீரர்களும் நேற்று காலையில் கோவை வந்து சேர்ந்தனர். அவர்களுடன் கோவையில் உள்ள துப்பாக்கி ஏந்திய 50 அதிவிரைவுப்படை வீரர்களும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சோதனை நேற்றும் தொடர்ந்தது. கோவை மாநகர பகுதியில் மட்டும் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். மாநகர பகுதியில் மொத்தம் 50 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. கோவை, போத்தனூர் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் முழு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அதுபோன்று அவர்கள் கொண்டு வந்த அனைத்து பொருட்களும் சோதனை செய்யப்பட்டன. இதுதவிர கமாண்டோ படை வீரர்கள், கோவையில் உள்ள அதிவிரைவுப்படை வீரர்கள் துப்பாக்கிகளை ஏந்தியபடி கோவை மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதுபோன்று பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு அங்குள்ள சோதனைச்சாவடிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் 800 போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊட்டி, குன்னூர், அருவங்காடு ரெயில் நிலையங்கள் மற்றும் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுப்புகிறார்கள். துப்பாக்கி ஏந்திய போலீசார் பூங்கா நுழைவு வாயிலில் நிறுத்தப்பட்டு உள்ளனர்.நீலகிரி மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள நாடுகாணி, எருமாடு, சோலாடி, பாட்டவயல், முள்ளி, பர்லியாறு, தெப்பக்காடு, குஞ்சப்பனை ஆகிய சோதனைச்சாவடிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், காட்டேஜ்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

Next Story