தேனி அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்திட்டை கண்டுபிடிப்பு


தேனி அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்திட்டை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 24 Aug 2019 11:15 PM GMT (Updated: 24 Aug 2019 4:59 PM GMT)

தேனி அருகே, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை யான கல்திட்டை கண்டு பிடிக்கப்பட்டது.

தேனி,

தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர் மோகன்குமாரமங்கலம். இவர், வைகை தொல்லியல் கழகத்தின் அமைப்பாளராக உள்ளார். தமிழ் வரலாற்று ஆய்வாளரான இவர், வைகை ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளான முல்லைப்பெரியாறு, வராகநதி, மஞ்சளாறு ஆகிய ஆற்றங்கரையோரங்களில் அமைந்துள்ள ஊர்களில் பழமையான சின்னங்கள், பழம்பெரும் பொருட் களை கண்டறியும் வகையில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கள ஆய்வு குறித்து மோகன்குமாரமங்கலத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களில் பலர் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்த இடங்களில் மிகப்பெரிய கற்களைக் கொண்டு நினைவுச் சின்னங்களை அமைத்திருக்கின்றனர். அவை இறந்தவரின் நினைவாக அமைக்கப்பட்டவையாக இருக்கலாம். அத்துடன் அவர்கள் வாழும் நில அமைப்பிற்கு ஏற்றவாறு தாழிகள், கல்வட்டங்கள், கல் வட்டத்துடன் கூடிய கல்லறை, கற்குகை, குத்துக்கற்கள், கல்திட்டை போன்ற பல்வேறு வடிவங்களில் நினைவு சின்னங்களை அவர்கள் அமைத்திருப்பது பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த வகையில், வைகை அணைப்பகுதியில் குத்துக்கல் உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்கள், கல்திட்டைகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.

வைகை அணைக்குள் உள்ள இரும்புக்கால வாழ்விட மேட்டுப்பகுதியில் பாறை கீறல்கள், இயற்கையான பாறையில் கிண்ணக்குறிகள், குழி வடிவில் மாலை போன்று அழகுபடுத்தப்பட்ட தாழிகள், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், செம்பழுப்பு நிறமுடைய வண்ணம் பூசப்பட்ட கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

கூடலூர் பகுதி திறள்மேட்டில் தாழிகளும், கல்வட்டங்களும் வடபுதுப்பட்டி மற்றும் பொம்மிநாயக்கன்பட்டியில் சிதைந்த நிலையில் கல்வட்டங்களும், தர்மத்துப்பட்டியில் இருந்து கொட்டோடைப்பட்டி செல்லும் வழியில் ஒரு கல்வட்டமும் கண்டறியப்பட்டது. அதேபோல் சிந்துவம்பட்டி அருகில் கல்திட்டையும், தேவதானப்பட்டியில் கற்குகையும் வழிபாட்டில் இருப்பதை கண்டறிய முடிந்தது.

மேலும் சில்வார்பட்டியில் குழிக்குறிகள் கொண்ட கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ஆகும். சங்க கால இலக்கியங்களில் இந்த கல்திட்டை குறித்த குறிப்புகள் உள்ளன. இதன்மூலம் இந்த கல்திட்டை 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது தெளிவாகிறது.

இந்தியாவில் காஷ்மீர், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, துங்கபத்திரை பகுதிகள் மற்றும் விதர்பா பெருங்கற்காலச் சின்னங்களின் வகையைச் சார்ந்த கல்வட்டங்களில் இதுபோன்ற கிண்ண அல்லது குழிக்குறிகள் கிடைத்துள்ளன.

சில்வார்பட்டியில் உள்ள இக்குறிகள் வளமை வழிபாட்டோடு தொடர்புடையதாக இருக்க வாய்ப்பு உள்ளது. இக்குறிகள் பற்றி ஆய்வு செய்தால் ஆதி வழிபாட்டு மரபின் தோற்றம் பற்றி அறியமுடியும். எனவே சில்வார்பட்டி குழிக்குறி கல்திட்டையை அகழாய்வு செய்து பார்த்தால் இக்குழிக்குறிகள் அமைக்கப்பட்டதன் நோக்கத்தையும் அதன் பண்பாட்டுத் தேவைகளையும் அறிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story