சென்னையில் 2-வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரதம்


சென்னையில் 2-வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 24 Aug 2019 10:45 PM GMT (Updated: 24 Aug 2019 5:17 PM GMT)

அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை,

தமிழக அரசு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களது எந்த கோரிக்கைகளையும் அரசு ஏற்காமல், பேச்சுவார்த்தைக்குகூட அழைக்காமலும் காலம் தாழ்த்தி வருவதாக கூறி நேற்று முன்தினம் முதல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 5 டாக்டர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

நேற்று 2-வது நாளாக டாக்டர்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது. இவர்களுக்கு ஆதரவாக சக அரசு டாக்டர்கள் பலர் அவர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர். இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

நாங்கள் மற்ற மாநில அரசு டாக்டர்களைவிட குறைவான ஊதியத்தை பெற்று வருகிறோம். முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் இதுவரையில் அரசுக்கு ரூ.2 ஆயிரத்து 224 கோடி வருமானம் ஈட்டி கொடுத்துள்ளோம். நோயாளிகளின் நலனுக்காக உழைக்கும் அரசு டாக்டர்களுக்கு சரியான ஊதியத்தை வழங்க அரசு மறுக்கிறது. எங்கள் கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில் வருகிற 27-ந்தேதி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story