குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 25 Aug 2019 4:30 AM IST (Updated: 25 Aug 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

கோனேரிப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் பெரம்பலூர் புறவழிச்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூர்,

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனேரிப்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்தப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக தெரு குழாய்களிலும், வீட்டு குழாய்களிலும் காவிரி குடிநீரும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீரும் வினியோகிக்கப்படவில்லையாம். மேலும் கோனேரிப்பாளையத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றப்படுமாம். இந்நிலையில் தொட்டியின் அருகே உள்ள மின்மாற்றியும் பழுது காரணமாக இயங்க வில்லையாம். இதனால் தற்போது தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்கு மின் மோட்டாரை இயக்க முடியாமல் போனது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் குடிநீர் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருவதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். மேலும் கிராமத்தில் தண்ணீர் வராததால், அவர்கள் அருகே உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் பிடிக்க சென்றால், அங்குள்ள மக்கள் இவர்களை தண்ணீர் பிடிக்க விடாமல் சண்டையிட்டு வெறும் குடத்துடன் அனுப்பி விடுகின்றனர்.

காலிக்குடங்களுடன் சாலை மறியல்

கோனேரிப்பாளையம் கிராமத்தில் காவிரி குடிநீரும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீரும் சீராக வினியோகிக்க கோரி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை மனு கொடுத்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுத்தபாடில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராம பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு நேற்று காலை கோனேரிப்பாளையம் அருகே உள்ள பெரம்பலூர் புறவழிச்சாலையில் திடீரென்று அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் அந்த சாலையின் நாலாம் புறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் வரை மறியலை கைவிட மாட்டோம் என்று உறுதியான முடிவில் பின்வாங்காமல் மறியலை தொடர்ந்தனர். அப்போது பெண்கள் குடிநீர் வினியோகிக்காத ஊராட்சி நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அப்போது போலீசார் மறியலை கைவிடவில்லை என்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று மறியல் செய்தவர்களை எச்சரித்தனர்.

அடிக்க பாய்ந்த போலீசார்

ஆனாலும் அவர்கள் மறியலை கைவிடாமல் தொடர்ந்தனர். இதனை கண்ட போலீசார் மறியல் செய்தவர்கள் சிலரை வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக தூக்கி சாலையோரத்தில் விட்டனர். இதனை சிலர் எதிர்த்து போலீசாரை கேட்டனர். அதற்கு போலீசார் அடிக்க பாய்ந்தனர். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதை தொடர்ந்து, போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். பின்னர் மறியல் செய்த கிராம மக்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம் தலைமையிலான அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோனேரிப்பாளையத்தில் குடிநீர் சீராக வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். குடிநீர் கேட்டு பெரம்பலூர் புறவழிச்சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story