பயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை : சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக போலீஸ் கண்காணிப்பு தீவிரம்


பயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை : சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
x
தினத்தந்தி 25 Aug 2019 5:00 AM IST (Updated: 25 Aug 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம்,

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பஸ், ரெயில் நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்களுக்கு டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள ஜங்ஷன் ரெயில் நிலையம், டவுன் ரெயில் நிலையம், ஓமலூர் மற்றும் ஆத்தூர் ரெயில் நிலையங்கள், சேலம் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சேலம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். பயணிகளின் உடைமைகளை மோப்ப நாய் மூலம் சோதனை செய்து வருகிறார்கள்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது தங்கி இருந்தால் அதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்துவ ஆலயங்கள், பள்ளி வாசல்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, முக்கிய இடங்களில் வாகன தணிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் நேற்று 2-வது நாளாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அரவிந்த்குமார், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ரெயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளையும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதித்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரெயில் மற்றும் சேலம் வழியாக சென்னை, வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் சோதனை நடத்தினர். மேட்டூர் அணை பகுதியில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேட்டூர் அணை பூங்காவிற்கு வரும் பொதுமக்களை தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

Next Story