திருப்பூர் மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வு 3,058 பேர் எழுதினர்


திருப்பூர் மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வு 3,058 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 25 Aug 2019 10:30 PM GMT (Updated: 25 Aug 2019 2:16 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் சீருடை பணியாளர்கள் தேர்வை 3,058 பேர் எழுதினார்கள்.

திருப்பூர்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2–ம் நிலை காவலர்கள், 2–ம் நிலை சிறைகாவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதற்காக, திருப்பூர் மாவட்டத்தில் ஜெய்வாபாய் பள்ளி மற்றும் குமரன் மகளிர் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து 3 ஆயிரத்து 306 ஆண்கள் மற்றும் 476 பெண்கள் என மொத்தம் 3,782 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், விண்ணப்பித்திருந்தவர்களில் 3,058 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 724 பேர் தேர்வு எழுத வரவில்லை.

 தேர்வு மைய வளாகத்திற்குள் காலை 9 மணிக்கு வரும் படி தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி காலையிலேயே தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் வந்தனர். சிலர் கடைசி நேரத்தில் வேக வேகமாக தேர்வு மையத்திற்குள் நுழைந்தனர். மையத்தின் நுழைவு வாசலிலேயே தேர்வு அறை எண் குறித்த விவரங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டிருந்தது. தேர்வு நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திற்குள் வெளி நபர்கள் யாரும் நுழைய போலீசார் அனுமதிக்கவில்லை.

2 தேர்வு மையங்களின் வளாகங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். முறைகேட்டில் ஈடுபடும் நபர்களை கண்டறியும் நோக்கில் தேர்வர்கள் அனைவரும், தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வுக்கு தேவையான பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களையும் அறைக்குள் எடுத்து செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. வளாகத்தின் வெளியிலேயே பாதுகாப்பான இடத்தில் பொருட்களை வைத்து விட்டு சென்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு 11.30 மணிக்கு முடிந்தது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மற்றும் மாநகர போலீசார் செய்திருந்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ராஜபாண்டி என்ற வாலிபர் திருநங்கையாக மாறி, கவி (வயது 27) என்ற பெயரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருப்பூருக்கு வந்தார். தற்போது திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் தங்கி இருக்கிறார். இவரும் போலீஸ் தேர்வை நேற்று எழுதினார். இவருக்கு குமரன்மகளிர் கல்லூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத்தில் கல்லூரி வளாகத்திற்குள் கவி வந்தார். அவருடைய ஆவணங்களை போலீசார் சோதனை செய்த போது, ஆதார் கார்டில் கவி என்றும் ஹால் டிக்கெட்டில் பழைய பெயரான ராஜபாண்டி என்றும் இருந்தது. இதனால் போலீசார், பெயர் மாற்றத்திற்கான ஆவணத்தை காண்பிக்கும்படி அறிவுறுத்தினார்கள். இதையடுத்து பெயர் மாற்றத்திற்கான ஆவணத்தை அவர் எடுத்து வந்து போலீசாரிடம் காட்டினார். இதன்பின்னர் அவரை போலீசார் தேர்வு எழுத அனுமதித்தனர்.

தேர்வு எழுதிய திருநங்கை கவி கூறியதாவது:–

சிறுவயதில் இருந்தே போலீஸ் துறையில் பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆசை. எனது நண்பர்களும், என்னுடன் இருக்கும் திருநங்கைகளும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். என்னை போன்ற திருநங்கை ஒருவர் ஏற்கனவே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரான பணியாற்றி வருகிறார். அதையே முன்மாதிரியாக எடுத்து கொண்டு போலீஸ் துறையில் இணைந்து பணியாற்ற வேண்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற முழு முயற்சியுடன் படித்து தேர்வு எழுதியுள்ளேன். எங்களை இழிவாக பார்க்கும் சமூகத்தின் பார்வையில், நான் நல்ல நிலையில் வரவேண்டும். இதில் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story