சென்னை விமான நிலையம் முன்பு ம.தி.மு.க. முற்றுகை போராட்டம் 200 பேர் கைது


சென்னை விமான நிலையம் முன்பு ம.தி.மு.க. முற்றுகை போராட்டம் 200 பேர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2019 3:45 AM IST (Updated: 25 Aug 2019 10:22 PM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் அண்ணா, காமராஜர் பெயரை சூட்டக்கோரி விமான நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு முனையமாக செயல்பட்டு வந்தது. தற்போது புதிய கட்டிடங்களில் செயல்பட்டுவரும் முனையங்களுக்கு அண்ணா, காமராஜர் பெயர்களை சூட்டப்படாமல் உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனையம் என செயல்பட்டு வருகிறது.

எனவே விமான நிலையத்துக்கு அண்ணா, காமராஜர் பெயர்களை சூட்டவேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விமான நிலையத்துக்கு மீண்டும் அண்ணா, காமராஜர் பெயர்களை சூட்டவேண்டும் என்று கூறி ம.தி.மு.க.வினர் நேற்று திடீரென சென்னை விமான நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சைதை சுப்பிரமணி, சு.ஜீவன், ம.தி.மு.க. இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அங்குவந்த போலீசார், இங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்றனர். பின்னர் அனைவரும் விமான நிலையம் எதிரே உள்ள திரிசூலம் ரெயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் 200 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story