ஈரோட்டில் 2-ம் நிலை போலீசார் பணியிடங்களுக்கு தேர்வு; 3,389 பேர் எழுதினர்


ஈரோட்டில் 2-ம் நிலை போலீசார் பணியிடங்களுக்கு தேர்வு; 3,389 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 25 Aug 2019 10:00 PM GMT (Updated: 25 Aug 2019 6:49 PM GMT)

ஈரோட்டில் 2-ம் நிலை போலீசார் பணியிடங்களுக்கான தேர்வை 3 ஆயிரத்து 389 பேர் எழுதினார்கள்.

ஈரோடு,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை போலீசார் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 54 ஆண்களும், 563 பெண்களும் என மொத்தம் 4 ஆயிரத்து 617 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் தேர்வு எழுதுவதற்காக பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி, ஈரோடு அருகே வாய்க்கால்மேடு நந்தா என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த தேர்வு மையங்களுக்கு காலையில் இருந்தே விண்ணப்பதாரர்கள் வந்தனர். அவர்களை 8.30 மணிஅளவில் தேர்வு அறைக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். அப்போது நுழைவு வாயில் பகுதியில் மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனையிடப்பட்டது. மேலும், செல்போன், கைப்பை உள்ளிட்ட பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.

காலை 9.45 மணிக்கு கேள்வித்தாள்கள் வினியோகம் செய்யப்பட்டது. சரியாக 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. ஈரோட்டில் நடந்த தேர்வை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது தேர்வு எழுத வந்தவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என்று போலீசாரிடம் கேட்டறிந்தனர்.

மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திக் குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 10.15 மணி வரை தாமதமாக வந்தவர்களையும் தேர்வு எழுத போலீசார் அனுமதித்தனர். அதன்பிறகு வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 80 மதிப்பெண்களுக்கு 80 வினாக்கள் கேட்கப்பட்டன. இந்த தேர்வை 3 ஆயிரத்து 389 பேர் எழுதினர். 1,228 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு 11.20 மணிக்கு நிறைவடைந்தது.

Next Story