மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் பயின்ற 1,252 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் துணைவேந்தர் பிச்சுமணி வழங்கினார்


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் பயின்ற 1,252 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் துணைவேந்தர் பிச்சுமணி வழங்கினார்
x
தினத்தந்தி 25 Aug 2019 10:30 PM GMT (Updated: 2019-08-26T00:48:45+05:30)

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பயின்ற 1,252 மாணவ-மாணவிகளுக்கு துணைவேந்தர் பிச்சுமணி பட்டம் வழங்கினார்.

நெல்லை, 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பயின்ற 1,252 மாணவ-மாணவிகளுக்கு துணைவேந்தர் பிச்சுமணி பட்டம் வழங்கினார்.

பட்டமளிப்பு விழா

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் உள்ள வ.உ.சி. கலையரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தலைமை தாங்கினார். கோவை ஓய்வு பெற்ற முதன்மை சார்பு நீதிபதியும், மக்கள் நீதிமன்ற நீதிபதியுமான ராமச்சந்திரன் பட்டமளிப்பு விழா உரையாற்றினார். பதிவாளர் சந்தோஷ்பாபு வரவேற்று பேசினார்.

விழாவில் 1,252 மாணவ- மாணவிகள் பட்டம் பெற்றனர். அவர்களுக்கு துணைவேந்தர் பிச்சுமணி பட்டம் வழங்கினார்.

நேர்மறையான அணுகுமுறை

அப்போது அவர் பேசுகையில், “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பெரும்பாலும் கிராமப்புறத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். பட்டம் பெறும் உங்களை வாழ்த்துகிறேன். இந்த பட்டம் உங்கள் வாழ்க்கையில் ஒரு மைல் கல் என்று கூறலாம். மாணவர்கள் தொடர்ந்து கற்று கொண்டே இருக்க வேண்டும். சகிப்பு தன்மையை வளர்த்து கொள்ள வேண்டும். பட்டம் பெறும் நீங்கள் பலர் வேலைக்கு செல்வீர்கள். சிலர் உயர்கல்வி படிப்பீர்கள். வேலைக்கு செல்லும் மாணவர்கள் பணிபுரியும் இடத்தில் நீங்கள் நேர்மறையான அணுகுமுறையை கையாள வேண்டும்” என்றார்.

விழாவில் மக்கள் நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன் பேசுகையில், “கல்லூரிகளில் மாணவர்களுக்கு படிக்கும் போது சுதந்திரம் அளிக்கப்பட்டது. நீங்கள் சிறந்த முறையில் படித்து பட்டம் பெற்று விட்டீர்கள். நீங்கள் வேலை செய்யும் இடத்திலும் பொறுப்புணர்ச்சியுடன் பணியாற்ற வேண்டும். கற்றது கையளவு, கல்லாதது உலக அளவு. இந்த பழமொழியை மாணவர்களாகிய நீங்கள் புரிந்து கொண்டு, புதிய விஷயங்களை கற்று கொண்டே இருக்க வேண்டும்” என்றார்.

விழா முடிவில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளின் இயக்குனர் ரவி நன்றி கூறினார். விழாவில் பல்கலைக்கழக தேர்வாணையர் சுருளியாண்டி, உறுப்பு கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story