செங்குன்றம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை - 6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


செங்குன்றம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை - 6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Aug 2019 10:00 PM GMT (Updated: 2019-08-26T01:48:32+05:30)

செங்குன்றம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகர், 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 26). நேற்று இரவு 7 மணி அளவில் இவர், தனது நண்பர்களுடன் பாலமுருகன் நகர் 5-வது தெருவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து விளையாடிக்கொண்டு இருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் தாங்கள் மறைத்துவைத்து இருந்த பட்டாக்கத்திகளை வெளியே எடுத்ததும், அங்கு விளையாடிக்கொண்டிருந்த வாலிபர்கள் அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

மர்ம கும்பல் பிரசாந்தை மடக்கி வெட்டமுயன்றனர். அவர், மர்ம கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் விரட்டிச்சென்று பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டியது.

இதில் தலை, கழுத்து, முதுகு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பிரசாந்த், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அவர் உயிரிழந்து விட்டதை உறுதி செய்த 6 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான பிரசாந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையான பிரசாந்துக்கு சசிகலா என்ற மனைவியும், ஜோஸ்வா என்ற மகனும் உள்ளனர். பிரசாந்த், பிரபல ரவுடி சேது என்பவரின் மைத்துனர் ஆவார். பிரசாந்த் மீது சோழவரம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த் கொலைக்கான காரணம் என்ன? முன்விரோத தகராறில் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பிச்சென்ற 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story