ஆவணி 2-வது ஞாயிறு: நாகராஜா கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்


ஆவணி 2-வது ஞாயிறு: நாகராஜா கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 26 Aug 2019 4:00 AM IST (Updated: 26 Aug 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

ஆவணி 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.

நாகர்கோவில்,

தென் தமிழகத்திலேயே நாக வழிபாட்டுக்கு சிறந்த ஸ்தலமாக நாகராஜா கோவில் திகழ்கிறது. நாகர்கோவிலில் அமைந்துள்ள இந்த கோவிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு சிறப்பாக இருக்கும். அதிலும் ஆவணி மாதங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு தனி மவுசு உண்டு. அதாவது ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையன்று நாகராஜரை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி குடும்பத்தில் நல்லது நடக்கும் என்பது பக்தர்களின் ஐதீகமாக இருக்கிறது. எனவே ஆண்டுதோறும் ஆவணி மாதங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நாகராஜரை வழிபட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாகராஜா கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

கூட்டம் அலைமோதல்

இந்த நிலையில் நேற்று ஆவணி மாத 2-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால், நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் நடை திறப்பதற்கு முன்பே கோவிலில் குவிந்தனர். பின்னர் அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறந்ததும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நாகராஜரை வழிபட்டனர்.

முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். மேலும் அங்கு அரச மரத்தடியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் விநாயகரை வணங்கி நாகராஜர் சன்னதி நோக்கி பக்தர்கள் சென்றனர். நாகராஜரை வழிபட்ட பிறகு அங்குள்ள சிவன், அனந்த கிருஷ்ணர், துர்க்கை மற்றும் முருகன் உள்ளிட்ட தெய்வங்களையும் தரிசனம் செய்தனர்.

கண்காணிப்பு கேமராக்கள்

கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய வசதியாக கம்புகளால் ஆன தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. பக் தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காக கோவிலில் 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. அதோடு கோவில் பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story