நேரப்பிரச்சினையில் அரசு பஸ்சை சிறைபிடித்து, தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம் - பயணிகள் அவதி


நேரப்பிரச்சினையில் அரசு பஸ்சை சிறைபிடித்து, தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம் - பயணிகள் அவதி
x
தினத்தந்தி 25 Aug 2019 10:30 PM GMT (Updated: 25 Aug 2019 11:48 PM GMT)

பொள்ளாச்சியில் நேரப்பிரச்சினையில் அரசு பஸ்சை சிறைபிடித்து தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்து தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் கோவைக்கு இயக்கப்படுகிறது. இவைகளில், கோவை, கிணத்துக்கடவுக்கு வேலைக்கு செல்வோர், கல்லூரிக்கு செல்வோர் என பலதரப்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர். இந்த நிலையில் தனியார் பஸ் மற்றும் அரசு பஸ்சை இயக்குவதில் நேரப்பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

நேற்று காலை பொள்ளாச்சி-கோவை செல்லும் தனியார் பஸ் காலை 11.15 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது அங்கு வந்த அரசு பஸ் ஒன்று, தனியார் பஸ் முன்பு நிறுத்தி பயணிகளை ஏற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், பொள்ளாச்சிக்கு பாதுகாப்பு பணிக்கு வந்து இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் மற்றும் போலீசார், அரசு போக்குவரத்துறை அதிகாரிகள்ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மகேந்திரன் கூறுகையில், பஸ்கள் இயக்குவது தொடர்பான நேரப்பிரச்சினைக்கு தீர்வுகாண விரைவில் உரிய அதிகாரிகளை கொண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும். அதுவரை இரு தரப்பினரும் எந்தவிதமான வாக்குவாதங்களில் ஈடுபடாமல் அவரவர்களுக்கு உரிய நேரத்தில் பஸ்களை இயக்க வேண்டும். இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அரசு பஸ்சை சிறைபிடித்து தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் இந்த பிரச்சினை காரணமாக பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story