விவசாயிகள் மக்காச்சோள படைப்புழு மேலாண்மை முறையை அறிந்து சாகுபடி செய்யலாம் கலெக்டர் தகவல்


விவசாயிகள் மக்காச்சோள படைப்புழு மேலாண்மை முறையை அறிந்து சாகுபடி செய்யலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 28 Aug 2019 4:30 AM IST (Updated: 27 Aug 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் மக்காச்சோள படைப்புழு மேலாண்மை முறையை அறிந்து சாகுபடி செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் கூறினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட வேளாண்மை துறையும், சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையமும் இணைந்து மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் அரியலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு படைப்புழு மேலாண்மை மற்றும் மானாவாரி சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள் பற்றிய வேளாண் விரிவாக்க கையேடுகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

விவசாயிகள் ஒரு பயிரை மட்டுமே சாகுபடி செய்யாமல் ஆண்டு தோறும் மாற்று பயிர் சாகுபடி செய்து தொடர் வருமானம் பெற வேண்டும். மானாவாரிக்கு ஏற்ற தொழில்நுட்பங்களையும், தகுந்த பயிர்களை தேர்வு செய்து மிகுந்த மகசூலை பெற வேண்டும். விவசாயிகள் அனைவரும் மக்காச்சோள படைப்புழு மேலாண்மை முறையை இக்கருத்தரங்கின் மூலம் தெரிந்து கொண்டு மக்காச்சோள சாகுபடி செய்ய வேண்டும். மேலும் விவசாயிகள் அனைவரும் உழவன் செயலி, இ-அடங்கல் செயலிகளை பதிவிறக்கம் செய்து விவசாயிகளுக்கு தேவையான அடங்கல்களை ஆன்ட்ராய்டு அலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கண்காட்சி

இந்த கருத்தரங்கில் விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக்குவதற்கான தொழில்நுட்பங்கள் குறித்தும், படைப்புழு குறித்த உரையும், வேளாண் துறையில் உள்ள திட்டங்கள் குறித்தும், தோட்டக்கலை துறை திட்டங்கள் மற்றும் முந்திரி சாகுபடியில் அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பங்களை குறித்தும், மக்காச்சோள படைப்புழு கட்டுப்படுத்துதல் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக வேளாண்மைத்துறையின் சார்பில் விவசாயிகள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட திட்ட விளக்க கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, நபார்டு வங்கி மேலாளர் நவீன்குமார், துணை இயக்குனர் பழனிசாமி, உதவி இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) சரண்யா, கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் நடனசபாபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், திருச்சி தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சந்திரசேகரன், தொழில்நுட்ப வல்லுனர்கள் அசோக்குமார் மற்றும் திருமலைவாசன் வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா, கிரீடு வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி அழகுகண்ணன் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story