பள்ளிப்பட்டு பஸ்நிலையத்தில் சேதம் அடைந்த இருக்கைகள், மின்விசிறிகளை சீரமைக்க கோரிக்கை


பள்ளிப்பட்டு பஸ்நிலையத்தில் சேதம் அடைந்த இருக்கைகள், மின்விசிறிகளை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 28 Aug 2019 4:30 AM IST (Updated: 27 Aug 2019 11:56 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு பஸ்நிலையத்தில் சேதம் அடைந்த இருக்கைகள், மின்விசிறிகளை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகர பஸ் நிலையம் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்தை மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, திருப்பதி, வேலூர், ஆற்காடு, பெங்களூரு, மதனப்பள்ளி, சத்யவேடு, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், திருத்தணி, சோளிங்கர், காஞ்சீபுரம், அரக்கோணம் போன்ற பகுதிகளுக்கு தினமும் தமிழக, ஆந்திர மாநிலங்களை சேர்ந்த அரசு பஸ்களும், சில தனியார் பஸ்களும் இயங்கி வருகின்றன.

இந்த பஸ்களில் பயணம் செய்ய பள்ளிப்பட்டு ஒன்றியத்தை சேர்ந்த 38 ஊராட்சிகளை சேர்ந்த மக்களும் தினமும் இங்கு வந்து செல்கின்றனர். மேலும் பள்ளிப்பட்டு பகுதி ஆந்திர மாநில எல்லையை ஒட்டி உள்ளதால் ஆந்திராவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் தாங்கள் செல்லவேண்டிய ஊர்களுக்கு இங்கு வந்து தான் பஸ் ஏறி செல்கின்றனர். இதுமட்டுமின்றி ஆந்திர மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கு பொருட்களை வாங்கவும், தங்கள் விளைநிலங்களில் பயிரிட்ட காய்கறிகளை விற்கவும் பள்ளிப்பட்டுக்கு பெருமளவில் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு பள்ளிப்பட்டு பகுதிக்கு தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பஸ் மூலம் வந்து செல்கின்றனர். பயணிகள் வசதிக்காக பஸ்நிலையத்தின் கிழக்கு பகுதியில் 9 இருக்கைகளும், 5 மின்விசிறிகளும் அமைக்கப்பட்டன.

நாளடைவில் இந்த இருக்கைகளும், மின்விசிறிகளும் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத வகையில் உள்ளன. இதன் காரணமாக பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகிறார்கள்.

எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இருக்கைகள், மின்விசிறிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story