விபத்தில் பலியான ஆசிரியர் பயிற்சி மாணவர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு தஞ்சை கோர்ட்டு உத்தரவு


விபத்தில் பலியான ஆசிரியர் பயிற்சி மாணவர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு தஞ்சை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 Aug 2019 3:45 AM IST (Updated: 28 Aug 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் பலியான ஆசிரியர் பயிற்சி மாணவர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த பருத்தியூரை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மனைவி மலர்க்கொடி. இவர்கள் தற்போது தஞ்சை முனிசிபல் காலனி பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் பாலசந்தர்(வயது 23). இவர், நன்னிலத்தில் தங்கி இருந்து வேதாரண்யத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட். முதலாம் ஆண்டு படித்து வந்தார். நன்னிலத்தில் டியூசன் சென்டரும் நடத்தி வந்தார்.

கடந்த 6-11-2017 அன்று பாலசந்தர், கல்லூரிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் நன்னிலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். நன்னிலம்-குடவாசல் சாலையில் சலிப்பேரி என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக வந்த தனியார் பஸ், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் பாலசந்தர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

ரூ.15 லட்சம் நஷ்டஈடு

இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இறந்த பாலசந்தரின் பெற்றோர் நஷ்ட ஈடு கேட்டு தஞ்சையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு கோருரிமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை நீதிபதி ஆர்.தங்கவேல் விசாரித்து இறந்த பாலசந்தரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சத்து 23 ஆயிரத்து 880 வழங்குமாறு தஞ்சையில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

Next Story