வீட்டில் இருந்த பெண்ணிடம் நூதன முறையில் 5 பவுன் தங்க சங்கிலி-பணம் திருட்டு


வீட்டில் இருந்த பெண்ணிடம் நூதன முறையில் 5 பவுன் தங்க சங்கிலி-பணம் திருட்டு
x
தினத்தந்தி 28 Aug 2019 3:45 AM IST (Updated: 28 Aug 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

ஆவூர் அருகே வீட்டில் இருந்த பெண்ணிடம் நூதன முறையில் 5 பவுன் தங்க சங்கிலி, பணம் திருடிச்சென்ற டிப்டாப் ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விராலிமலை,

விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே உள்ள எஸ்.மேலப்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி மனைவி தைலம்மை (வயது 53). இவரது கணவர் இறந்து விட்டதால், திருமணமாகாத தனது மகன் பன்னீர்செல்வத்துடன் மேலப்பட்டியில் புதிதாக வீடுகட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் சொந்த வேலையாக வெளியே சென்றுவிட்டார். தைலம்மை மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு 45 வயது மதிக்கத்தக்க பேண்ட் சட்டை அணிந்த டிப்டாப் ஆசாமி ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அவரிடம் தைலம்மை வீடு இதுதானா என்று கேட்டார். ஆம் என்று அந்த பெண்மணி கூறியவுடன், அந்த நபர் நான் உங்கள் மகனுக்கு தெரிந்தவர், நான் திருச்சியில் டாக்டராக உள்ளேன். எனது புதிய வீட்டிற்கு புதுமனை புகுவிழா நடத்த உள்ளதால் உங்க மகனுக்கு அழைப்பு விடுக்க வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

நகை-பணம் திருட்டு

பின்னர் தைலம்மையிடம் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி குடித்துள்ளார். அப்போது அந்த மர்ம ஆசாமி தைலம்மையிடம் எனது வீடு புதுமனை புகுவிழாவிற்கு மா இலை, அருகம்புல் வேண்டும். அதனால் உங்கள் வீட்டு அருகே இருந்தால் எனக்கு கொண்டுவந்து கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட தைலம்மை வீட்டின் வெளியே அந்த நபரை உட்கார வைத்து விட்டு வீட்டின் பின்புறம் சற்று தொலைவில் சென்று மா இலை, அருகம்புல் அறுத்துக்கொண்டு 20 நிமிடம் கழித்து வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன்பு உட்கார வைத்திருந்த அந்த ஆசாமி அங்கிருந்து மாயமாகி இருந்தார். பின்னர் தைலம்மை தனது வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் உள் அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவை பார்த்தபோது அதிலிருந்த 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.16 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து தைலம்மை, தனது மகனுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்த தகவலின் பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை-பணத்தை திருடி சென்ற டிப்டாப் ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story