சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதற்கு முதல்-அமைச்சர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி


சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதற்கு முதல்-அமைச்சர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 28 Aug 2019 5:30 AM IST (Updated: 28 Aug 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதற்கு முதல்-அமைச்சர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தாரமங்கலம், 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் தேர்நிலையம் அருகே கலைஞர் திடலில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாசி வரவேற்றார். விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதியின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக இருந்தவர். மேலும் அவர் பல பிரதமர்களை உருவாக்கியவர். சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு, திருச்சியை தொடர்ந்து சேலத்தில் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியை கதை ஆசிரியராக உருவாக்கி கொடுத்த சேலத்தில் அவருடைய சிலையை திறப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோல் திராவிடர் கழகத்தின் பவள விழாவும் இன்று(நேற்று) நடைபெறுகிறது.

திராவிடர் கழகத்தின் கருப்பு கொடியின் நடுவில் வட்ட வடிவில் உள்ள சிகப்பு கலர் கருணாநிதியின் ரத்தம் என்று வரலாறு கூறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் 5 நாட்கள் பெய்த தொடர் மழையால் மக்கள் இன்னலுக்கு ஆளாகி நடுத்தெருவுக்கு வந்தனர். இந்த நேரத்தில் எதிர்க்கட்சி தலைவரான நான் அங்கு நேரிடையாக சென்று மக்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தேன். மேலும் வீடுகளை இழந்த மக்களுக்கு உதவும் வகையில் தி.மு.க. சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டது. ஆனால் இதை மு.க.ஸ்டாலின் விளம்பரத்திற்காக செய்கிறார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.

நான் தமிழக மக்களை சந்தித்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. இங்கிருந்து உங்களுக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். அதாவது, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியை தவிர்த்து ஏதாவது ஒரு கிராமத்துக்கு எந்த ஒரு துணையும் இல்லாமல், போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் இருவரும் செல்வோம். அப்போது மக்கள் யாரை அடையாளம் காணுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

அ.தி.மு.க. தொடர்ந்து 8 ஆண்டுகள் ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சியில் பிரிப்பதை தவிர வேறு ஏதாவது செய்தார்களா?. ஆனால் அவர்கள் எங்களை பார்த்து பிரிவினைவாதி என்கிறார்கள். நாங்கள் பிரிவினைவாதி கிடையாது. மத்தியில் ஆளுபவர்கள் மாநிலத்தை பிரிக்கிறார்கள். மாநிலத்தில் ஆளுபவர்கள் மாவட்டத்தை பிரிக்கிறார்கள்.

ஒரு மாவட்டத்தை பிரிக்கும் போது அங்கு ஆய்வு செய்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு பிரிக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் மாவட்டம் பிரிக்கப்படுகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினார். இதன் மூலம் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்ததாக அவர் அறிவித்தார். இதன் மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து வெள்ளை அறிக்கை விடுமாறு அவரிடம் நாங்கள் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை.

அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2-வது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினார். இதில் ரூ.5 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்பதை நாங்கள் முறியடித்து உள்ளோம்.

அ.தி.மு.க.வை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் 4 ஆயிரம் வாக்குகளுக்குள் குறைவான வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார்கள். இதில் அமைச்சராக உள்ளவர்கள் சிலர் மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளனர். வெளிநாட்டிற்கு செல்லும் முதல்-அமைச்சர் அங்கிருந்து தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் முதலீட்டை பெற்று வந்தால் பாராட்டுகிறோம். இருந்தாலும் இவர்கள் முதலீட்டை பெற செல்கிறார்களா? அல்லது அவர்களுடைய முதலீட்டை அதிகரிக்க செல்கிறார்களா? என சந்தேகம் ஏற்படுகிறது.

சட்டசபையில் 110-வது விதியின் கீழ் பல திட்டங்களை அறிவித்து வருகிறார்கள். ஆனால் இதில் அவர்கள் ஏதாவது நிறைவேற்றி உள்ளார்களா?. எம்.ஜி.ஆர். விழாவை அரசு விழாவாக கொண்டாடினர். அப்போது மாவட்டந்தோறும் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்கள். இதுவரை அந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதா?.

மத்தியில் பா.ஜ.க. பக்கப்பலமாக இருப்பதால் இவர்கள் கொள்ளை, ஊழல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதன் முதலில் சட்டசபையில் தி.மு.க. தான் பேசியது. இதேபோல் நாடாளுமன்றத்திலும் தி.மு.க. உறுப்பினர்கள் உருக்காலையை தனியார் மயமாக்க கூடாது என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.

சேலம் உருக்காலையை தனியார் மயக்கமாக்குவதற்கு முதல்-அமைச்சர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?, இது தொடர்பாக ஒரு கண்டன அறிக்கை அல்லது சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது உண்டா?. இல்லையெனில் அமைச்சர்கள் அல்லது முதல்-அமைச்சரே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை மந்திரி அல்லது அதிகாரிகளை சந்தித்து பேசி தடுக்க நடவடிக்கை எடுத்தாரா?. இதையெல்லாம் விட்டுவிட்டு முதலீட்டை திரட்டுவதற்கு வெளிநாடு செல்வது வெட்க கேடாகும். அ.தி.மு.க. ஆட்சியை முடிவு கட்ட நாம் அனைவரும் தயாராக வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவில், எம்.பி.க்கள் சின்ராஜ், எஸ்.ஆர்.பார்த்திபன், செந்தில்குமார், கவுதம சிகாமணி, தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வகணபதி, மேற்கு மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கந்தசாமி, தொண்டர் அணி அருமை ஆறுமுகம், முன்னாள் பேரூராட்சிமன்ற தலைவர் பழனிசாமி, நெசவாளர் அணி துணை செயலாளர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், நகர செயலாளர் குப்பு என்கிற குணசேகரன், வக்கீல் கருணாநிதி, நகர பொருளாளர் சேகரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் தங்கராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சண்முகம், ராமலிங்கம், குப்பனூர் மாணிக்கம், சிலம்பரசன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், கமலக்கண்ணன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கண்ணன், தொண்டர் அணி அமைப்பாளர் செல்வம், நாரணபாளையம் ஊராட்சி செயலாளர் எம்.பி.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர செயலாளர் குப்பு என்கிற குணசேகரன் நன்றி கூறினார்.

Next Story