தஞ்சையில், முக்குலத்து புலிகள் அமைப்பினர் சாலை மறியல் - 15 பேர் கைது


தஞ்சையில், முக்குலத்து புலிகள் அமைப்பினர் சாலை மறியல் - 15 பேர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2019 4:00 AM IST (Updated: 29 Aug 2019 3:51 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், முக்குலத்து புலிகள் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அகில இந்திய முக்குலத்தோர் பேரவை தலைவர் சரவணன் உள்பட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சரவணன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், பொய் வழக்கு போட்டு ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக போலீசாரை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக முக்குலத்துப்புலிகள் அமைப்பினர், அகில இந்திய மூவேந்தர் முன்னணி நிர்வாகிகள் தஞ்சை ரெயிலடியில் கூடினர்.

இதுகுறித்த தகவல் அறிந்த தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபடுவதற்காக வந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது எதிர்ப்பை தெரிவிக்க ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் கூறினர்.

ஆனால் அவர்கள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும்போதே திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்திற்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி மாவட்ட செயலாளர் பாலா அன்பானர், முக்குலத்துப்புலிகள் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்த மறியல் போராட்டம் சுமார் 5 நிமிடங்கள் நடந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்து ஜீப் மற்றும் ஆட்டோவில் ஏற்றி தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

Next Story