ரிசர்வ் வங்கியில் இருந்து பெற்ற உபரி நிதியை பயன்படுத்தி அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்
ரிசர்வ் வங்கியில் இருந்து பெற்ற உபரி நிதியை பயன்படுத்தி அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தஞ்சாவூர்,
தி.மு.க. விவசாய அணி சார்பில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் தஞ்சையில் நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., செ.ராமலிங்கம் எம்.பி., முன்னாள் எம்.பி. ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில விவசாய அணி செயலாளர் விஜயன் வரவேற்றார்.
கருத்தரங்கை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. தலைவராக நான் பொறுப்பேற்ற ஓராண்டு நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிற நேரத்தில் விவசாய கருத்தரங்கில் கலந்து கொண்டு விவசாயிகள் பற்றி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கருத்தரங்கை பொறுத்தவரை 100 அரசியல் கருத்தரங்க நிகழ்ச்சிக்கு ஒப்பானவை. இதை யாரும் மறுத்துவிட முடியாது.
அரசியல் என்பது மனித உடல் என்று சொன்னால் விவசாயம் மனித உயிர். உயிரற்ற உடல் இயங்குவது இயலாத காரியம். மத்திய, மாநில அரசுகள் உடலையும், உயிரையும் சேதமாக்கி கொண்டு இருக்கிறது.
அந்த ஆபத்தை உணர்ந்து தான் தஞ்சையில் அவசரமாக கூடி இருக்கிறோம். காலை முதல் மாலை வரை கூறிய கருத்துக்களை கேட்கும்போது உள்ளத்தில் அச்சம், பயம் ஏற்பட்டு இருக்கிறது. நாட்டின் எதிர்காலம் என்ன? தமிழகத்தின் எதிர்காலம் என்ன? தமிழகத்தின் எதிர்கால சந்ததியினர் என்னவாக போகிறார்கள்?. அவர்களுக்கு நாம் என்ன செய்ய போகிறோம்? என்ற அச்சம் உருவாகி இருக்கிறது. காரணம். வேளாண்மை பற்றி நல்ல செய்திகள் காதில் விழவில்லை. கர்நாடக அரசு காவிரி தண்ணீரை தர மறுக்கிறது. காவிரி டெல்டா வறண்டு காணப்படுகிறது. குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை.
பருவமழை பொய்த்து விட்டது. மேட்டூர் அணையில் இருந்து குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறக்க முடியவில்லை. விவசாயம் நலிந்து விட்டது. விவசாயிகள் தற்கொலை பெருகி வருகிறது. விவசாயிகள், கூலிவேலைக்கு செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு இருக்கிறது. வேறு மாநிலங்களுக்கு இடம்பெயரக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். காவிரி டெல்டாவை பழிவாங்கும் நிலையில், விவசாய நிலத்தை பாழாக்க மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. விவசாய நிலத்தை அபகரித்து 8 வழிச்சாலை போடுகிறார்கள்.
இப்படி விவசாயிகளை பற்றி வரும் செய்திகள் நல்ல முறையில் அமைந்து இருக்கிறதா? என்பதை விவாதிக்க கருத்தரங்கம் நடக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்று சொன்னால் தமிழகம் மிக மோசமான சூழ்நிலைக்கு வந்து விடும். தஞ்சையில் கருத்தரங்கம் நடப்பதால் தஞ்சை பிரச்சினை, டெல்டா பிரச்சினை என்று பார்க்கக்கூடாது. ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சினையாக பார்க்க வேண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
காவிரி தண்ணீர் 12 மாவட்டங்களின் விவசாயத்திற்கு பயன்படுகிறது. 19 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையாக உள்ளது. 25 லட்சம் ஏக்கர் நிலம் காவிரி தண்ணீரை நம்பித்தான் உள்ளது. தமிழக மக்கள் காவிரி தண்ணீரை நம்பி இருக்கின்றனர். தஞ்சையில் நடந்ததை போன்ற விவசாயிகள் கருத்தரங்கம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும். தஞ்சைக்கு ஆபத்து என்று சொன்னால் தமிழகத்திற்கே ஆபத்து என்பதை உணர வேண்டும். கோடைகாலத்தில் கூட காவிரி தண்ணீர் வற்றாது. ஆனால் இன்றைக்கு இயற்கையின் சதியால் மட்டுமல்ல, அரசியல் கட்சிகளின் சதியாலும் வறண்டு கிடக்கிறது.
காவிரி தண்ணீரை தர கர்நாடக அரசு மறுக்கிறது. காவிரி தண்ணீரை கேட்பது நமது உரிமை. அதை கொடுப்பது கர்நாடக அரசின் கடமை. ஆனால் கடமையை தவறி கர்நாடக அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. தி.மு.க. ஆட்சியின்போது கர்நாடக அரசு கடமை தவறியபோது குரல் கொடுத்தோம். 1968-ம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக கருணாநிதி இருந்தபோது காவிரி உரிமை குறித்து மைசூர் மாகாணத்திற்கு சென்று முதல்-மந்திரியுடனும், மத்திய மந்திரியுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு மாநிலத்திற்கே சென்று பேச்சுவார்த்தை நடத்திய முதல் தலைவர் கருணாநிதி தான்.
1969-ல் முதல்-அமைச்சராக இருந்தபோது காவிரி உரிமைக்காக குரல் கொடுத்து இருக்கிறார். 1971-ம் ஆண்டு முதன் முதலாக காவிரி பிரச்சினைக்காக வழக்கு போட்டவர் நமது தலைவர் தான். 1990-ம் ஆண்டு காவிரி தீர்ப்பாயத்தை பிரதமராக இருந்த வி.பி.சிங் அமைத்து கொடுத்தார். இடைக்கால தீர்ப்பாக 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவையும் கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கருணாநிதி வலியுறுத்தியதால் காவிரி நடுவர் மன்றத்தை அமைத்து தந்தார். அது வழங்கிய இடைக்கால தீர்ப்பின்படி தண்ணீர் தர கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது.
2007-ம் ஆண்டு இறுதி தீர்ப்பின்படி 195 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். அதையும் செயல்படுத்தவில்லை. இப்போது உச்சநீதிமன்றம் 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதையும் தர மறுக்கிறது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் மூலம் தான் நமது உரிமையை தொடர்ந்து காப்பாற்றிக்கொண்டு இருக்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பா.ஜ.க. அரசு மறுப்பு தெரிவித்தது.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஆணையத்தை அமைத்தது. அதுவும் முறையாக செயல்படுகிறதா? என்றால் இல்லை. தமிழகத்தை பற்றி பா.ஜ.க. கவலைப்படவில்லை. கர்நாடகத்திற்கு சாதகமாகத்தான் செயல்பட்டு வருகிறது. இதை தட்டிக்கேட்க முடியாத முதுகெலும்பு இல்லாத ஆட்சி நடக்கிறது. கர்நாடக அரசு அந்த மாநில மக்களுக்கு உண்மையாக இருக்கிறது. அந்த உணர்வு ஏன் தமிழக அரசுக்கு வரவில்லை?. கொள்ளை அடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவதால் காவிரி பிரச்சினையை அவர்கள் பெரிய பிரச்சினையாக கருதவில்லை.
காவிரி தண்ணீரை பெற்றுத்தரக்கூடிய பொறுப்பு பா.ஜ.க.வுக்கு உண்டு. ஆனால் அவர்கள் இதைப்பற்றி கவலைப்படவில்லை. கர்நாடக அரசையும் தட்டி கேட்கவில்லை. தமிழக மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கவில்லை. இதனால் பழிவாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்து வேளாண்மை நிலத்தை நாசப்படுத்தி வருகிறார்கள்.
நிலம் இருந்தால் தானே விவசாயம் செய்வார்கள். விவசாயம் செய்யும் சூழல் இருந்தால்தானே தண்ணீர் கேட்பார்கள். நிலத்தையே சிதைத்து விட ரசாயன தாக்குதலை மத்திய அரசு நடத்துகிறது. ஒரு புறமு ஹைட்ரோ கார்பன், மீத்தேன், அணுஉலை, நியூட்ரினோ என ரசாயன தாக்குதலையும், மறுபுறம் தமிழில் பேசக்கூடாது. இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு என கலாசார தாக்குதலையும் நடத்துகிறது.
ரசாயன தாக்குதல், கலாசார தாக்குதலை எதிர்கொள்ளும் வல்லமை தி.மு.க.விற்கு உண்டு என்பதை எதிர்காலத்தில் நிரூபித்து ஆக வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் தி.மு.க. எதிர்க்கிறது என சொல்கிறார்கள்.
மக்களை பாதிக்கக்கூடிய, இயற்கையை பாதிக்கக்கூடிய திட்டம் எதுவாக இருந்தாலும் உறுதியோடு தி.மு.க. எதிர்க்கும். மக்களுக்கு நன்மை தரக்கூடிய திட்டங்களை கொண்டு வந்தால் அரசியல் பார்க்காமல் வரவேற்க தயாராக இருக்கிறோம். நாங்கள் வளர்ச்சிக்கு எதிரி அல்ல.
இந்தியா வளர வேண்டும். இந்திய மக்களை சிதைத்து தான் வளர வேண்டுமா?. இந்தியா வல்லரசு ஆக வேண்டும். இந்திய மக்கள் பாதிக்கப்பட வேண்டுமா?. புதிய திட்டம் கொண்டு வரும்போது 100 முறை சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் அண்ணா சொன்னார். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை எதிர்க்கிறோம் என்றால், பிரதமர் மோடி சொன்னதை தான் நாங்கள் செய்கிறோம்.
கடந்த ஜூன் 5-ந் தேதி சர்வதேச சூரியசக்தி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசும்போது, எண்ணெய் கிணறுகளுக்கு பதிலாக சூரியசக்தி ஆற்றலை பயன்படுத்த வேண்டும் என்றார். மத்திய, மாநில அரசுகள் நாடகம் நடத்துகிறார்கள்.
ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் சகோதரி கனிமொழி ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பெட்ரோலியத்துறை மந்திரி, தமிழகத்தில் மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டம் தான் செயல்படுத்தப்படுகிறது என்றார். மறுநாள் சட்டசபையில் நான், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து கேள்வி எழுப்பியபோது, தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நாங்கள் அனுமதி தரவில்லை. தர மாட்டோம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
யார் செல்வது உண்மை?. யார் செல்வது பொய்?. மத்திய, மாநில அரசுகள் மக்களை ஏமாற்றுகிறது. இந்த திட்டத்தை கைவிட்டு காவிரி டெல்டாவை பாதுகாக்க வேண்டும் என்றால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் தான் காவிரி டெல்டாவை காக்க முடியும். தமிழகத்தை காக்க முடியும்.
ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை மத்திய அரசு பெற்று இருக்கிறது என செய்திகள் வருகின்றன. இந்த நிதியை பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாய கடன்களையும் மத்திய அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
இந்த கருத்தரங்கில் ஒலித்த குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். சட்டசபையில் நாங்கள் குரல் எழுப்புவோம். விவசாயத்தை காப்போம். தமிழகத்தை காப்போம். விவசாயிகளை காப்போம். கருத்தரங்கம் முடிந்துவிட்டாலும் பணி முடியவில்லை. விரைவில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பணிகள் முடிவடையும்.
இவ்வாறு அவர் பேசினார். முடிவில் நீலமேகம் எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.
Related Tags :
Next Story