ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த 3 பெண்களுக்கு தலா 5 ஆண்டு சிறை திருச்சி கோர்ட்டு தீர்ப்பு


ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த 3 பெண்களுக்கு தலா 5 ஆண்டு சிறை திருச்சி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Aug 2019 3:45 AM IST (Updated: 30 Aug 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த 3 பெண்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி கே.கே.நகர் தங்கையாநகரை சேர்ந்த தமயந்தி(வயது 83), ராணி(63), ராஜலெட்சுமி(60) ஆகியோர் கூட்டாக சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தினர். இவர்களிடம், சீட்டு சேர்ந்த 29 முதலீட்டாளர்களிடம் முதிர்வு தொகையை கொடுக்காமல் ரூ.32 லட்சத்து 28 ஆயிரத்தை மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2007-ம் ஆண்டு புகார் அளித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணி, தமயந்தி, ராஜலெட்சுமி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.

5 ஆண்டுகள் சிறை தண்டனை

நீதிபதி கிருபாகரன் மதுரம் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், “தமயந்தி, ராணி, ராஜலெட்சுமி ஆகிய 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 1 மாதம் கடுங்காவல் தண்டனையும் அனுபவிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட 29 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் 29 லட்சமும், வழக்கு பதிந்த நாளில் இருந்து அதற்கான வட்டியாக 7½ சதவீதம் என ரூ.26 லட்சமும் சேர்த்து, மொத்தம் ரூ.55 லட்சத்தை 3 மாதத்துக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த தவறினால் 3 பேரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்” என்று கூறி இருந்தார்.


Next Story