சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்காததால் நிலம் கைப்பற்றும் போராட்டம் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் அறிவிப்பு


சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்காததால் நிலம் கைப்பற்றும் போராட்டம் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Aug 2019 4:15 AM IST (Updated: 30 Aug 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்காததால் செப்டம்பர் 30-ந் தேதி நிலம் கைப்பற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் அறிவித்தனர்.

அரியலூர்,

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் பேசுகையில், புலாம்பாடியில் உள்ள சித்தேரி, கீரைவாடி, பொன்னேரி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும். குரும்பலூரில் இருந்து ஆப்புரான் கோவில் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முக்கியமான மருந்துகள் இல்லாததால், டாக்டர்கள் அந்த மருந்துகளை மருந்து கடைகளில் வாங்கி வர நிர்ப்பந்திக்கின்றனர். எனவே உயிர் காக்கும் மருந்துகள் மருத்துவமனையில் தேவையான அளவு இருப்பு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மாவட்டத்தில் டாஸ்மாக் குறைதீர் கூட்டம் கூட மாதத்திற்கு 2 முறை அதிகாரிகள் நடத்துகிறார்கள். அதில் மது பிரியர்களால் கொடுக்கப்படும் மனுக்களின் மீது அதிகாரிகளால் தீர்வு காணப்படுகிறது. ஆனால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது. ஆனால் கூட்டத்தில் விவசாயிகள் கொடுக்கும் மனுவிற்கு சரியான தீர்வு கிடைப்பதில்லை. எனவே விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையும் மாதத்திற்கு 2 முறை நடத்த வேண்டும் என்றார்.

நிலம் கைப்பற்றும் போராட்டம்

தமிழ்நாடு பாமாயில் மர சாகுபடியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் பேசுகையில், குன்னம் தாலுகா துங்கபுரத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய- மாநில அரசுகள் பங்களிப்போடு 100 சதவீதம் மானியத்தில் எண்ணெய் உற்பத்தியை பெருக்க திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். துங்கபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும். துங்கபுரம் பகுதிக்கு கூடுதலாக அரசு டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லத்துரை மற்றும் அச்சங்க விவசாயிகள் பேசுகையில், வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக தமிழக அரசு, ஒரு தனியார் நிறுவனம் மூலம் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களை ஒரு ஏக்கருக்கு லட்சம் கணக்கில் ரூபாய் கொடுத்து வாங்கினார்கள். நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு வேலை தருவதாகவும், வீடு கட்டுவதற்கு காலிமனை தருவதாகவும் கூறினார்கள். ஆனால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை பெற்று கொண்ட அந்த தனியார் நிறுவனம் எந்தவித தொழிற்சாலைகளையும் இதுவரை உருவாக்கவில்லை. சுமார் 12 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படாததால் நிலம் கொடுத்த விவசாயிகள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறார்கள். எனவே சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசும், தனியார் நிறுவனம் அந்தந்த நில உரிமையாளர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நிலம் கைப்பற்றும் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

கூடுதல் நிவாரணம்

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ராஜேந்திரன் பேசுகையில், மாவட்டத்தில் படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் முழுமையாக கிடைக்க பெறவில்லை. மேலும் தமிழ்நாட்டில் மக்காச்சோளம் அதிகம் பயிரிடப்படும் மாவட்டம் பெரம்பலூர். எனவே மக்காச்சோளத்திற்கு தமிழக அரசு அறிவித்த நிவாரண நிதி போதாது. கூடுதலாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு அரசு நிவாரணம் இன்னும் நிறைய விவசாயிகளுக்கு கிராம நிர்வாக அதிகாரிகளின் குளறுபடியால் கிடைக்கப்பெறவில்லை. எனவே அதனை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்றார்.

13-ந் தேதி முற்றுகை போராட்டம்

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் பேசுகையில், இலவச விவசாய மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி வருகிற செப்டம்பர் மாதம் 13-ந் தேதி பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை சங்கத்தின் சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். கொட்டரை நீர்த்தேக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

இந்திய விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பேரவையின் தலைவர் ஈஸ்வரன் பேசுகையில், அரசு கால்நடை மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்துகள் இருப்பு இருக்க வேண்டும். மேலும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள், மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story