கொசுப்புழுக்கள் உற்பத்தி நடவடிக்கை: வீடு, வணிக நிறுவனங்களில் தண்ணீர் தேங்கியிருந்தால் அபராதம் - ரூ.500 முதல் ரூ.10 லட்சம் வரை நிர்ணயம்


கொசுப்புழுக்கள் உற்பத்தி நடவடிக்கை: வீடு, வணிக நிறுவனங்களில் தண்ணீர் தேங்கியிருந்தால் அபராதம் - ரூ.500 முதல் ரூ.10 லட்சம் வரை நிர்ணயம்
x
தினத்தந்தி 30 Aug 2019 4:15 AM IST (Updated: 30 Aug 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகுவதை தடுக்க, வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் தண்ணீர் தேங்கியிருந்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் தனியார் மற்றும் அரசு டாக்டர்களுக்கு காய்ச்சல் பற்றிய சிகிச்சை முறைகளை விளக்குவதற்கான பயிற்சி வகுப்பினை சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று அம்மா மாளிகையில் தொடங்கி வைத்தார். மேலும் டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார். கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் பேசியதாவது:-

கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் இருப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கொசு ஒழிப்பு பணியில் 2 ஆயிரத்து 950 களப் பணியாளர்கள், 234 மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு 500 வீட்டிற்கும் ஒரு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொசுக்களை அழிப்பதற்காக 431 பூச்சிக்கொல்லி தெளிப்பான்கள், 236 கையில் தூக்கிச் செல்லக்கூடிய புகைப்பரப்பும் எந்திரங்கள், 39 வாகனங்களில் புகைப்பரப்பும் எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

காய்ச்சல், நோயின் தாக்கம் குறித்த விவரங்கள் ஒவ்வொரு நாளும் மருத்துவமுகாம்கள் மூலம் டாக்டர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களின் வீடுகளுக்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நகர்புற சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் மூலம் இலவசமாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சி மருத்துவமனைகள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும், அம்மா உணவகங்களில் இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்யப்படும் போது வீடுகளிலோ அல்லது கட்டிடங்களிலோ கொசுப்புழு கண்டறியப்பட்டால் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். அதன்படி குடியிருப்பு பகுதிகளுக்கு ரூ.500 முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும், கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையிலும், தொழில் மற்றும் வணிக வளாகங்களுக்கு ரூ.500 முதல் ரூ.10 லட்சம் வரையிலும், இதர அரசு கட்டிடங்கள், தனியார் கல்வி நிலையங்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும். இதுவரையில் ஆகஸ்டு மாதம் மட்டும் ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயிற்சி வகுப்பில் துணை கமிஷனர் பி.மதுசுதன் ரெட்டி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, கூடுதல் இயக்குநர் டாக்டர் வடிவேலன், இந்திய மருத்துவக் கழகத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story