ரெயில்வே அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 28 பவுன் நகை- பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


ரெயில்வே அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 28 பவுன் நகை- பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 31 Aug 2019 10:15 PM GMT (Updated: 31 Aug 2019 7:21 PM GMT)

பந்தநல்லூரில் ரெயில்வே அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 28 பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அண்ணா நகர் சிவன் வடக்கு மேல வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது58). இவர் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் சீனியர் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தனம். இவர் பந்தநல்லூர் அருகே ரங்கராஜபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று மனோகரனும், தனமும் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் ஆங்காங்கே கீழே சிதறி கிடந்தன. அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 28 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரத்தை காணவில்லை.

நகை-பணம் கொள்ளை

மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகையின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு தடயவியல் நிபுணர்களுடன் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக ஆசிரியை தனம், பந்தநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 28 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story