நெல்லையில் வீடு புகுந்து மின்வாரிய என்ஜினீயர் மனைவியை தாக்கி நகை கொள்ளை - மர்மநபர்கள் துணிகரம்
நெல்லையில் வீடு புகுந்து மின்வாரிய என்ஜினீயர் மனைவியை தாக்கி நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பேட்டை,
நெல்லை பழைய பேட்டை காந்திநகர் ஷேக் மதார் நகரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 50). இவர் பெருமாள்புரம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி திலகவதி (45). நேற்று முன்தினம் இரவு இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த திலகவதி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் திடுக்கிட்டு கண் விழித்த திலகவதி தங்க சங்கிலியை பிடித்துக் கொண்டு சத்தம் போட்டார். அப்போது மர்ம நபர்கள் திலகவதியை தாக்கி விட்டு சங்கிலியை பிடித்து இழுத்தனர்.
இதில் 4 பவுன் சங்கிலி மர்ம நபர்கள் கையில் சிக்கியது. சங்கிலியின் ஒரு பகுதியும், அதில் இருந்த தாலியும் திலகவதி கையில் கிடைத்தது. அப்போது கண்விழித்த ராஜகோபாலும் மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் அவர்கள் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினர்.
மர்மநபர்கள் திலகவதியிடம் நகையை பறிப்பதற்கு முன்பாக வீட்டுக்குள் இருந்த பீரோக்களை திறந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகைகளையும் கொள்ளை அடித்துச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு தலைமையில் போலீசார், ராஜகோபால் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story