எந்தவித நிபந்தனையின்றி விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்


எந்தவித நிபந்தனையின்றி விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Sept 2019 4:45 AM IST (Updated: 2 Sept 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு எந்தவித நிபந்தனையின்றி கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

திருத்துறைப்பூண்டி,

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக கர்நாடகாவில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாததால் குறுவை சாகுபடி பொய்த்து போனது. இதனால் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இப்பகுதி மக்கள் வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் நிலை உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 13-ந்தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணை வந்தடைந்தது. கல்லணையில் இருந்து கடந்த 17-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் கடைமடை பகுதிகளான மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை. இதற்கு காரணம் கேட்டால், மதகுகள் கட்டும் பணி நடைபெறுவதால் தண்ணீர் திறக்கவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற கடன்களை இன்னும் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த ஆண்டு விவசாய பணிகளை தொடங்குவதற்கு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு எந்தவித நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும்.

கடைமடைபகுதி வரை தண்ணீர் செல்ல ஏதுவாக கஜா புயலில் ஆறுகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கட்சியின் தேசிய குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், மாவட்டக்குழு உறுப்பினர் சந்திரராமன், நகர செயலாளர் முருகேசன், முன்னாள் நகர செயலாளர் முத்துக்குமரன், விவசாய சங்க நகர செயலாளர் டி.பி.சுந்தர், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமயந்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story