“உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
“உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்“ என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
வாசுதேவநல்லூர்,
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அங்குள்ள பூலித்தேவன் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருக்கு தி.மு.க.வினர் வெள்ளிவாளை நினைவு பரிசாக வழங்கினார் கள். பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் வரலாறு இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் தமிழகம், பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் இருந்து உள்ளது என்பதை பறைசாற்றுகிறது. அவரது சிலைக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை பெருமையாக நினைக்கிறேன். தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டன. அவர்களுடைய பெருமைகள் மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டன.
வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறிய கருத்தை எதிர்த்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் என்ன நடக்கிறது என்று நாங்கள் கவனித்துக்கொண்டு இருக்கிறோம்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 10 அமைச்சர்கள் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்று உள்ளனர். இன்னும் 8 முதல் 10 அமைச்சர்கள் வெளிநாடு செல்வதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே இந்த ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் 2 முறை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி உள்ளனர்.
இந்த மாநாடுகளில் ரூ.5.5 லட்சம் கோடியில் தொழில்கள் தொடங்கவும், முதலீடுகள் செய்யவும் ஏற்பாடு நடந்ததாக அறிவித்து இருந்தனர். ஆனால் அறிவிப்போடு தான் இதுவரை உள்ளது. அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதுகுறித்து நான் ஏற்கனவே கூறி உள்ளேன். ஏற்கனவே வருவதாக கூறிய நிதியை திரட்டுவதற்கு பதிலாக பொழுதுபோக்கிற்காக அமைச்சர்கள் சுற்றுலா சென்றுவிட்டு முதலீட்டாளர்களிடம் நிதி திரட்ட செல்கிறோம் என்று கூறுகிறார்கள். மொத்தத்தில் தமிழக அமைச்சரவை சுற்றுலா துறை அமைச்சரவையாக மாறிவிட்டது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவித்த பிறகு அங்கு யார் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி முடிவு எடுக்கப்படும். தற்போது நாங்கள் போட்டியிடுவோம் என்று கூட்டணி கட்சியினர் கருத்து கூறுவது அவர்களுடைய உரிமையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் இரா.ஆவுடையப்பன், சிவபத்மநாதன், எம்.பி.க்கள் ஞானதிரவியம், தனுஷ்குமார், முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம், தொழில் அதிபர் அய்யாத்துரைபாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கருப்பசாமிபாண்டியன், துரைராஜ், ஒன்றிய செயலாளர்கள் பொன்.முத்தையாபாண்டியன் (வாசுதேவநல்லூர்), வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் (ராதாபுரம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story