கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், குட்டியுடன் உலா வந்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு


கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், குட்டியுடன் உலா வந்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 3 Sept 2019 4:00 AM IST (Updated: 3 Sept 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குஞ்சப்பனை, தட்டப்பள்ளம் மற்றும் அதன் சுற்று வட்டார ஆதிவாசி கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள பலா மரங்களில் தற்போது பலாப்பழங்கள் காய்த்து குலுங்குகிறது. இதனை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் இங்கு வந்து முகாமிட்டுள்ளன.

இதனால் காட்டு யானைகள் தட்டப்பள்ளம், மாமரம் மற்றும் குஞ்சப்பனை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்கள், சாலைகளில் உலா வருகின்றன. எனவே கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் குட்டியுடன் காட்டு யானை ஒன்று கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை அருகே சாலையின் நடுவே நின்று கொண்டிருந்தது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தினர். சிலர் தங்களது செல்போனில் படம் எடுத்து கொண்டனர்.

சாலையில் குட்டியுடன் காட்டு யானை அங்கும் இங்குமாக உலா வந்ததால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் காட்டுயானை குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னர் போக்குவரத்து சீரானது. இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story