தஞ்சையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 2 விநாயகர் சிலைகள் அகற்றம்: போலீசார் குவிப்பு


தஞ்சையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 2 விநாயகர் சிலைகள் அகற்றம்: போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 2 Sep 2019 10:15 PM GMT (Updated: 2 Sep 2019 8:31 PM GMT)

தஞ்சையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 2 விநாயகர் சிலைகள் அகற்றப்பட்டன. பிரச்சினை ஏற்படாமல் இருக்க அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர், 

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இதற்காக இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு முறையாக அனுமதி பெற வேண்டும். தஞ்சை நிர்மலா நகரில் காலிமனை தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே பிரச்சினை நிலவி வருகிறது. இருசமூகத்தினரையும் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் அழைத்து பேசியும் சுமுக தீர்வு ஏற்படவில்லை.

இதேபோல் கீழவாசல், வண்ணாந்துறை பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் நிர்மலா நகர், வண்ணாந்துறை ஆகிய இரு இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைப்பது மட்டுமின்றி எந்தவித மதவழிபாடும் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. இந்து முன்னணி மாநகர தலைவர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள் சிலர், நிர்மலா நகரில் பிரதிஷ்டை செய்வதற்காக விநாயகர் சிலையை கொண்டு சென்றனர்.

ஏற்கனவே அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதையும் மீறி நிர்மலாநகரில் விநாயகர் சிலையை இந்து முன்னணியினர் பிரதிஷ்டை செய்தனர். இதனால் இருசமூகத்தினருக்கு இடையே பிரச்சினை ஏற்படும் நிலை உருவானது. இதனையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் அங்கு விரைந்து சென்று அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அகற்றி, அந்த சிலையை தஞ்சை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் பிரச்சினை ஏதும் ஏற்படாமல் இருக்க நிர்மலா நகரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் வண்ணாந்துறை பகுதியில் நேற்று மாலை இந்து அமைப்பை சேர்ந்த சிலர், விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தனர். ஏற்கனவே அங்கு விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிர மணியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை அகற்றி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story