இந்திய தேசம், இந்து தேசியமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது - திருமாவளவன்


இந்திய தேசம், இந்து தேசியமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது - திருமாவளவன்
x
தினத்தந்தி 3 Sept 2019 4:30 AM IST (Updated: 3 Sept 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

இந்திய தேசம், இந்து தேசியமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது என நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பேசினார்.

சென்னை,

தமிழியக்கம் சார்பில் 46 ஆயிரம் தூய தமிழ் பெயர்களை கொண்ட ‘சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை செனாய்நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழியக்கத்தின் தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார்.

சென்னை மண்டல செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் வரவேற்றார். மாநில செயலாளர் மு.சுகுமார், பதிப்பாசிரியர் புலவர் வே.பதுமனார், பொதுச்செயலாளர் அப்துல்காதர் ஆகியோர் பேசினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. நூலை வெளியிட, அதனை முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா பெற்றுக்கொண்டார். தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். விழாவில் தொல் திருமாவளவன் பேசியதாவது:-

மத அடையாளம் சாதி அடையாளத்தை கொண்டுவருகிறது. சாதி அடையாளம், மத அடையாளம் இல்லாதது தமிழ் பெயர் தான். சாதி அடையாளம் இல்லாத அரசியலை முன்னெடுக்கவே தமிழ் பெயர் சூட்டுவதற்கு என்னை உந்தியது. இந்திய தேசம் இந்து தேசியமாக தற்போது கட்டமைக்கப்பட்டு வருகிறது.

இந்து தேசியத்தை எதிர்க்காமல் தமிழ் தேசியத்தை வளர்க்க முடியாது. வெறும் மொழி, இன உணர்வு நீர்த்துப்போய்விடும். அரசியல் சார்ந்து இருந்தால் தான் அது நீடிக்கும். ஒரே தேசம், ஒரே கலாசாரம் என முழங்கும் பா.ஜ.க.வால் ஒரே சாதி, ஒரே கிராமம், ஒரே சுடுகாடு என்று கூறமுடியுமா? அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவது தான் பா.ஜ.க.வின் அடுத்த செயல்திட்டம்.

இவ்வாறு அவர் பேசினார்.

வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் பேசுகையில், “நம் தமிழ் மொழிக்கு இணையாக உலகில் வேறு எந்த மொழியும் கிடையாது. ஆனால் தமிழ் மொழி பிறமொழி சொற்களோடு தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலைமை மாறவேண்டும். இனி திருமண தம்பதிகளுக்கு தூய தமிழ் பெயர்கள் என்ற புத்தகத்தை பரிசாக நாம் அனைவரும் கொடுக்க வேண்டும். தமிழுக்கு தமிழகத்தில் பஞ்சம் வரக்கூடாது” என்றார்.

பழ.கருப்பையா பேசும்போது, “வேறு எந்த மொழிக்கும் தமிழின் மொழியின் பெருமை இல்லை. தமிழ் மொழியின் உயிர் ஒலி வடிவத்தில் தான் உள்ளது. அதை நாம் அழித்துவிடக்கூடாது. பிற மொழியின் தாக்கத்தால் தான் தமிழ் மொழி சுருங்கிவிட்டது. தொடர்ந்து வட சொற்கள் தமிழில் நுழைகிறது. இந்த நிலைமை மாற வேண்டும்” என்றார்.

Next Story