அவதூறாக பேசிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தாலிக்கயிறுடன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்
அவதூறாக பேசிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாலிக்கயிறுடன் போலீஸ் நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
நிலக்கோட்டை,
நிலக்கோட்டை அருகே உள்ள வள்ளிநகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பாக சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் அந்த சிலைகள் நேற்று முன்தினம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வைகையாற்றில் கரைக்கப்பட்டன. இதையடுத்து வள்ளிநகர் இளைஞர்கள் ஆட்டம், பாட்டத்துடன் சரக்கு வேனில் ஊருக்கு திரும்பினர்.
அப்போது அதே ஊரை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் ஆட்டம் போட்ட இளைஞர் களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும், பெண்களையும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கைகளில் தாலிக்கயிறுடன் அவதூறாக பேசிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதொடர்பாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதையடுத்து பெண்கள் புகார் கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story