தெற்கு ரெயில்வேயில் தமிழ் தெரிந்த ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் - எம்.பி.க்கள் வலியுறுத்தல்
தெற்கு ரெயில்வேயில் தமிழ் தெரிந்த ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என திருச்சியில் அதிகாரிகளுடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
திருச்சி,
தெற்கு ரெயில்வேயின் கீழ் இயங்கும் திருச்சி, மதுரை ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுடன் ரெயில்வே அதிகாரிகள் நேற்று கலந்தாய்வு நடத்தினர். இதற்கு தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின் தலைமை தாங்கினார். ரெயில்வே கோட்ட மேலாளர்கள் அஜய்குமார் (திருச்சி), லெனின் (மதுரை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் எம்.பி.க்கள் திருச்சி சிவா (மேல்சபை), ஜோதிமணி (கரூர்), பாரிவேந்தர் (பெரம்பலூர்), திருநாவுக்கரசர் (திருச்சி) ரவீந்திரநாத் குமார் (தேனி), வைத்திலிங்கம் (புதுச்சேரி), வெங்கடேசன் (மதுரை), நவாஸ்கனி (ராமநாதபுரம்), ஞானதிரவியம் (நெல்லை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்) உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 19 பேரும் கேரளாவை சேர்ந்த 2 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.
எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் புதிய ரெயில்கள் இயக்குதல், கூடுதலாக ரெயில் நிறுத்தங்கள், தண்டவாளங்கள் பராமரிப்பு மற்றும் தமிழ் தெரியாத ஊழியர்களை ரெயில்வே வணிக பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது மற்றும், ரெயில் வழித்தடங்களை நீட்டிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ரெயில்வே நிர்வாக அதிகாரிகளிடம் வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் பேசிய கருத்துகள் குறிப்பெடுக்கப்பட்டது. அவை பரிசீலிக்கப்பட்டு ரெயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ராகுல்ஜெயின் தெரிவித்தார்.
காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் பிற்பகல் 2 மணிவரை நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி காலை 11.50 மணிக்கு தாமதமாக வந்து கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. மாறாக புகைப்படக்காரர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் மட்டும் படம் எடுத்துக்கொள்ள 5 நிமிடம் அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டம் முடிந்து வெளியே வந்த மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிலைய அதிகாரிகள் உள்பட ரெயில்வேயின் அனைத்து முக்கிய பிரிவுகளிலும் தமிழ் தெரியாத, அதாவது இந்தி மட்டுமே பேசுகிற வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக திருச்சி ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரெயில் நிலையங்களில் 492 நிலைய அதிகாரிகள் (ஸ்டேசன் மாஸ்டர்) உள்ளனர். இவர்களில் 247 பேர் இந்தி பேசும் மாநிலத்தவர். மதுரை ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரெயில் நிலையங்களில் 483 நிலைய அதிகாரிகள் உள்ளனர். இவர்களில் 220 பேர் இந்தி பேசும் மாநிலத்தவர் ஆவர். இதேபோன்று திருச்சி, மதுரை கோட்டங்களில் கமர்சியல் பிரிவுகளில் தமிழ் தெரியாத 160-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இடம் பெற்றிருக்கிறார்கள். இதனால் தமிழ்மட்டுமே பேசத்தெரிந்த பயணிகள் இவர்களிடம் உரையாடுவதில் மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த அவலத்தை தவிர்க்க அன்றாட மக்கள் தொடர்பு கமர்சியல் பிரிவுகளில் நன்றாக தமிழ் பேசத்தெரிந்தவர்களை பணியமர்த்த வேண்டும். அதேபோல காலியாக உள்ள பணிகளில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களை நியமிக்க தெற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இதே கோரிக்கையை மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட சில எம்.பி.க்களும் வலியுறுத்தினர்.
இந்த கூட்டத்தில் மதுரை, திருச்சி ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட எம்.பி.க்களான கனிமொழி (தூத்துக்குடி), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), தொல்.திருமாவளவன் (சிதம்பரம்) மற்றும் முத்துகருப்பன் (மேல்சபை) எம்.பி. ஆகியோர் பங்கேற்கவில்லை.
கனிமொழி மற்றும் சில எம்.பி.க்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து சக எம்.பி.க்கள் கூறுகையில், ‘அவசர வேலை காரணமாகவோ அல்லது சொந்த வேலை காரணமாகவோ வரமுடியாமல் போயிருக்கலாம். மேலும் இன்றைய தினம்(நேற்று) சுபமுகூர்த்த தினமாக உள்ளது என்றும், வேறு தேதியில் கலந்தாய்வு கூட்டத்தை நடத்த அனுமதி கேட்டோம். ஆனால், ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்த தேதியை மாற்ற முடியாது என அதிகாரிகள் கூறி விட்டனர்’ என்றனர்.
Related Tags :
Next Story