சுசீந்திரத்தில், பேராசிரியை வீட்டில் தீ விபத்து; ரூ.20 லட்சம் பொருட்கள் சேதம்


சுசீந்திரத்தில், பேராசிரியை வீட்டில் தீ விபத்து; ரூ.20 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 6 Sept 2019 4:30 AM IST (Updated: 5 Sept 2019 9:42 PM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரத்தில் பேராசிரியை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மேலும், தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 2 வீரர்கள் காயமடைந்தனர்.

மேலகிருஷ்ணன்புதூர்,

சுசீந்திரம் சன்னதிதெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 64), ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவருடைய மனைவி அருள்செல்வி (55). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் சுஷ்மா (24), எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு தற்போது மேற்படிப்புக்காக தயார் செய்து வருகிறார். இவர்களது வீடு 3 மாடி கொண்டது.

நேற்று முன்தினம் இரவு மனோகரனும், அருள்செல்வியும் மாடியில் தனித்தனி அறையில் தூங்கி கொண்டிருந்தனர். மகள் சுஷ்மா நள்ளிரவு வரை படித்து கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டின் கீழ்தளத்தில் இருந்து பயங்கரமான வெடி சத்தம் கேட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த சுஷ்மா கீழே வந்து பார்த்த போது, கீழ்தளத்தில் இருந்த மின்சார சுவிட் போர்டுகள் தானாக எரிந்து வெடித்து சிதறி கொண்டிருந்தன. மேலும், அங்கு இருந்த டி.வி., சோபாக்கள், அலமாரியில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள், மேஜை, நாற்காலி போன்ற பொருட்கள் தீயில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன. இதனால், கீழ்தளம் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.

உடனே, அவர் தூங்கி கொண்டிருந்த தனது பெற்றோரை எழுப்பி தப்பி செல்ல முயன்றார். ஆனால், கீழ் தளத்தில் தீ எரிந்து கொண்டிருந்ததால் வெளியே செல்ல முடியவில்லை. இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். அவர்கள், மேல்தளத்தில் உள்ள ஜன்னல்கள் வழியாக வீட்டில் இருந்தவர்களை மீட்டனர்.

இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தீயில் எரிந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியதில் 2 தீயணைப்பு வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருந்தாலும் வீரர்கள் 1½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து மனோகரன் கூறியதாவது:-

நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மீட்டர்பெட்டி எரிந்தது. இதுகுறித்து சுசீந்திரம் மின்வாரியத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, எரிந்த மீட்டர் பெட்டியை அகற்றிவிட்டு, புதிய மீட்டர் பெட்டிக்கான பணத்தை வாங்கினர். ஆனால், புதிய மீட்டர் பெட்டி பொருத்தாமல் மின் இணைப்பை கொடுத்துவிட்டு சென்றனர். இந்தநிலையில், வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வீட்டில் இருந்தவர்கள் தீ விபத்தை பார்த்து வேகமாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story