விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்காக வீராணம் ஏரியை 11-ந் தேதிக்குள் திறக்க நடவடிக்கை


விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்காக வீராணம் ஏரியை 11-ந் தேதிக்குள் திறக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Sep 2019 10:30 PM GMT (Updated: 6 Sep 2019 8:59 PM GMT)

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்காக 11-ந் தேதிக்குள் வீராணம் ஏரியை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் பணித்துறை அதிகாரி கூறினார்.

சிதம்பரம்,

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் வறண்டு கிடந்த மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்தது. நிரம்பும் நிலையில் இருந்த தருணத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக கடந்த மாதம் 13-ந்தேதி தண்ணீர் திறந்து வைத்தார். காவிரி ஆற்றில் கரைபுரண்டு வந்த இந்த தண்ணீர் கல்லணை, கீழணை, வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 22-ந் தேதி மதியம் வந்து சேர்ந்தது.

கல்லணையில் இருந்து கீழணைக்கு தண்ணீர் வரத்துக்கு ஏற்ப வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. கடந்த 2 நாட்களாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று மாலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 46.82 அடியாக உயர்ந்தது. இதனால் ஏரி, கடல் போல் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து தண்ணீர் வருமேயானால் வீராணம் தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டும். ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 46 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சம்பா சாகுபடி செய்ய வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக சிதம்பரம் ரெயில் நிலையம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நேற்று காலை விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு செயற்பொறியாளர் சாம்ராஜ் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர்கள் அருணகிரி, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வேளாண்மைத்துறை மாவட்ட உதவி இயக்குனர் மலர்வண்ணன், சீர்காழி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விவேகானந்தன், காவிரி விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரன், வீராணம் ஏரி விவசாயிகள் சங்க தலைவர் பாலு, கீழணை பாசன விவசாயிகள் சங்கம் விநாயகமூர்த்தி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு நீரை பயன் படுத்துவோர் சங்கம் சிவசரவணன் மற்றும் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், வீராணம் ஏரியில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும். இப்போதே திறந்தால்தான் நெல் விதைக்க முடியும். விளை நிலங்களை தயார்படுத்த உதவியாக இருக்கும். எனவே வருகிற 11-ந் தேதிக்குள் வீராணம் ஏரியை திறக்க வேண்டும் என்றனர்.

இதனை தொடர்ந்து செயற்பொறியாளர் சாம்ராஜ் பேசியதாவது:-

வீராணம் ஏரி நீர்மட்டம் 47 அடியை எட்டியதும், பாசனத்துக்காக தண்ணீர் திறக்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் கல்லணையில் இருந்து கீழணைக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால், வீராணத்துக்கும் குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே வீராணம் ஏரிக்கு கூடுதல் நீர் திறந்து விடுமாறு, உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். அவர்களும் போதிய அளவு தண்ணீர் தருவதாக கூறியுள்ளார்கள்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கலெக்டரிடம் ஆலோசனை செய்து வருகிற 11-ந் தேதிக்குள் பாசனத்துக்காக வீராணம் ஏரியை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீராணம் ஏரி மூலம் ஒரு லட்சத்து 72 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் குடிமராமத்து பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதன் மூலம் 135 பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 445 கிலோ மீட்டர் தூரம் பாசன வாய்க்கால் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே வீராணம் ஏரி தண்ணீர் பாசனத்துக்கு தடையின்றி செல்லும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story