சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வந்த வாலிபர் கைது - மற்றொருவர் விடுவிக்கப்பட்டார்


சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வந்த வாலிபர் கைது - மற்றொருவர் விடுவிக்கப்பட்டார்
x
தினத்தந்தி 6 Sep 2019 11:00 PM GMT (Updated: 6 Sep 2019 9:01 PM GMT)

சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் விடுவிக்கப்பட்டார்.

கோவை,

சார்ஜாவில் இருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் 2 பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக கோவையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு இயக்கக (டி.ஆர்.ஐ.) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், டி.ஆர்.ஐ. அதிகாரிகள் கோவை விமான நிலையம் சென்று சார்ஜா விமானத்துக்காக காத்திருந்தனர்.

அந்த விமானம் அதிகாலை 4.30 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளின் பாஸ்போர்ட்டுகளை குடியேற்ற பிரிவு அதிகாரிகள் சரிபார்த்து கொண்டிருந்தனர். உடனே மத்திய வருவாய் புலனாய்வு இயக்கக அதிகாரிகள் குறிப்பிட்ட 2 பயணிகளையும் தனியே அழைத்து விசாரித்தனர். மேலும் அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் தங்கம் எதுவும் சிக்கவில்லை.

ஆனால் அவர்கள் கொண்டு வந்த பற்பசை டியூப்புகளை சோதனை செய்ததில் அதில் தங்கம் நூதன முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அதாவது தங்கத்தை பசை போன்று உருக்கி அதன் மீது பிளாஸ்டிக் உறைபோட்டு மறைத்து சிறிய குண்டுகளாக தயாரித்துள்ளனர். அந்த குண்டுகளை பற்பசை டியூப்புக்குள் அமுக்கி மறைத்து கடத்தி வந்துள்ளனர்.

மேலும் அவர்கள் இருவரும் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டை சோதனை செய்தனர். அப்போது பெல்ட் அணியும் இடத்தில் தங்க சங்கிலிகளை மறைத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 2 பேரும் தங்கள் ஆசனவாயில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர்களில் ஒருவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த ஜியாஉல் ஹக்(வயது 23), மற்றொருவர் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அமீர் சுகைல்(23) என்பதும் தெரியவந்தது.

2 பேரும் கொண்டு வந்த தங்கத்தை உருக்கியதில் மொத்தம் ஒரு கிலோ 81 கிராம் 390 மி.கிராம் தங்கம் இருந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.42 லட்சத்து 15 ஆயிரத்து 258 ஆகும்.

இதில் ஜியா உல் ஹக் கடத்தி வந்த 415 கிராம் என்றும் அதன் மதிப்பு ரூ.16 லட்சம்.. அமீர் சுகைல் கடத்தி வந்தது 666 கிராம் மற்றும் 390 மி.கிராம். இதன் மதிப்பு ரூ.26 லட்சத்து 15 ஆயிரத்து 258 ஆகும். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.42 லட்சத்து 15 ஆயிரத்து 258 ஆகும். இவர்களில் அமீர் சுகைல் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு இயக்கக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சார்ஜாவில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக சிக்கிய 2 பேருமே தங்கத்தை பற்பசை டியூப், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்துள்ளனர். 2 பேருமே வேலை தேடி வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ளனர். அங்கு வேலை கிடைக்காததால் அவர்கள் தங்கம் கடத்தி வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இவர்கள் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால் 2 பேருமே ஒரே முறையில் தங்கத்தை கடத்தி வந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய சுங்க இலாகா விதிகளின் படி வெளிநாடுகளில் இருந்து ரூ.20 லட்சத்துக்கு மேல் தங்கத்தை கடத்தி வந்தால் தான் அவர் கைது செய்யப்படுவார். அதன்படி சார்ஜாவில் இருந்து தங்கம் கடத்தி வந்த அமீர் சுகைல் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.20 லட்சத்துக்கு குறைவாக தங்கம் கடத்தி வந்த ஜியா உல் ஹக் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் கடத்தி வந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது.

வெளிநாட்டில் இருந்து சுங்கத்துறைக்கு தெரியாமல் தங்கத்தை கடத்தி வந்த குற்றத்துக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும். அந்த விளக்கத்தில் வெளிநாட்டில் தங்கத்தை வாங்குவதற்கான பணம் எப்படி கிடைத்தது? அதற்கான வருமானம் எங்கிருந்து வருகிறது? என்பன போன்ற கேள்விகளும் அதற்கான ஆவணங்களும் கேட்கப்படும். அந்த ஆவணங்களை முறையாக காண்பித்தாலும் ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்கத்துக்கு அபராதமாக ரூ.16 லட்சம் ஆக மொத்தம் ரூ.32 லட்சம் செலுத்தினால் தான் அந்த தங்கம் திருப்பி தரப்படும். ஒருவேளை ரூ.16 லட்சம் தங்கத்துக்கான ஆவணங்கள் தராமல் போனால் ஜியா உல் ஹக்கிற்கு சொந்தமான சொத்துகள் இருந்தால் அதை முடக்கி அபராதத் தொகை ஈடு கட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story