மதுரையில் பரிதாபம்: வகுப்பறையில் தூக்குப்போட்டு பிளஸ்-1 மாணவி தற்கொலை; உடலை ஸ்கூட்டரில் கொண்டு செல்ல முயன்றதால் பரபரப்பு


மதுரையில் பரிதாபம்: வகுப்பறையில் தூக்குப்போட்டு பிளஸ்-1 மாணவி தற்கொலை; உடலை ஸ்கூட்டரில் கொண்டு செல்ல முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Sept 2019 5:15 AM IST (Updated: 7 Sept 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

மதுரை புதூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூட வகுப்பறையில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ஸ்கூட்டரில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

மதுரை புதூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்து. கொத்தனார். அவருடைய மனைவி சுந்தரி. இவர்களுக்கு 2 மகள்கள். அதில் 2-வது மகள் அர்ச்சனா (வயது 15). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.

வழக்கம் போல் அவர் நேற்று காலை பள்ளிக்கு சென்றார். முதல் மாடியில் உள்ள தனது வகுப்பறைக்கு அவர் சென்ற போது, அங்கு வேறு மாணவிகள் யாரும் இல்லை. அப்போது அவர் வகுப்பறையின் ஜன்னல் மற்றும் கதவுகளை சாத்தி வைத்ததாக தெரிகிறது. பின்னர் அர்ச்சனா, ஆசிரியை அமரும் நாற்காலி மீது ஏறி நின்று, மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார்.

அந்த நேரத்தில் ஒரு மாணவி, ஜன்னல் கதவை திறந்துள்ளார். அப்போது மாணவி அர்ச்சனா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.

அர்ச்சனா பள்ளிக்கூட வகுப்பறையில் தூக்கில் தொங்கியது குறித்து அவரது சக மாணவிகளுக்கு தெரியவந்தது. அதில் ஒரு மாணவி, அருகில் உள்ள வீட்டுக்கு வேகமாக ஓடிச் சென்று, அர்ச்சனாவின் தந்தை முத்துவிடம் தெரிவித்தார்.

உடனே முத்து பதறியபடி பள்ளிக்கு ஓடி வந்து, தூக்கில் தொங்கி கொண்டிருந்த அர்ச்சனாவை கீழே இறக்கினார். ஆசிரியைகளும் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவியை ஆட்டோவில் ஏற்றி, அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது அர்ச்சனா ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. அதன்பின்னர் அவர் மகளின் உடலை பள்ளிக்கு கொண்டு வந்தார். இதற்கிடையே பள்ளி நிர்வாகத்தினர் சம்பவம் குறித்து புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். மேலும் தகவல் அறிந்து அந்த பகுதி மக்கள், மாணவியின் உறவினர்கள் பள்ளிக்கூடம் முன்பு திரண்டனர். மகளின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல முத்து முடிவு செய்தார். அதற்காக அவர் அருகில் உள்ள ஆட்டோவை அழைத்த போது யாரும் வரவில்லை.

எனவே அர்ச்சனாவின் உடலை உறவினர்கள் உதவியுடன் ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு கொண்டு செல்ல முயன்றார். அப்போது போலீசார் அவர்களை தடுத்தனர். ஆனால் அர்ச்சனாவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு மேலும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் தகராறு செய்தவர்களை அங்கிருந்து விரட்டி, அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு அண்ணாநகர் உதவி போலீஸ் கமிஷனர் லில்லிகிரேஸ் வந்து விசாரணை நடத்தினார். அப்போது மாணவி தற்கொலைக்கான பின்னணி குறித்து ஆராய அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மாணவி பள்ளி வகுப்பறைக்குள் காலை 7.58 மணிக்கு நுழைவதும், அதன்பின்னர் அவரது தந்தை கதவை திறந்து மாணவியின் உடலை வெளியே தூக்கி வரும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.

மாணவி அர்ச்சனா கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் அவர் பள்ளிக்கு சரிவர செல்லவில்லை என்றும், உடல்நிலை பாதிப்பு அவரது படிப்பை பாதித்ததால்தான், அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டார் என்று உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.அதே நேரத்தில் மாணவியின் தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து அவரது பெற்றோர் மற்றும் உடன் படிக்கும் மாணவிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவி வகுப்பறையில் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, அந்த பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் பள்ளி வகுப்பறையில் மாணவி அர்ச்சனா மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு நீதி விசாரணை தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story