சென்னிமலை அருகே, நார் மில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


சென்னிமலை அருகே, நார் மில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 9 Sept 2019 4:00 AM IST (Updated: 8 Sept 2019 6:47 PM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே நார் மில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது.

சென்னிமலை, 

சென்னிமலை அருகே துலுக்கம்பாளையத்தை சேர்ந்தவர்கள் கார்த்தி (வயது 29), ஹரீஸ் (25), சதீஸ் (41) மற்றும் பிரகாஷ் (25). உறவினர்களான இவர்கள் 4 பேரும் அதேப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நார் மில் தொழிற்சாலை அமைத்து நடத்தி வருகிறார்கள். இங்கு தேங்காய் மட்டையில் இருந்து நவீன முறையில் நார் தயாரிக்கும் எந்திரங்கள் மூலம் நார் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மில்லில் 10–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று மதியம் 2 மணி அளவில் தொழிற்சாலையின் உள் பகுதியில் இருந்து கரும்புகை வெளி வந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அதன் உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து சென்று பார்த்த போது தொழிற்சாலைக்குள் இருந்த தேங்காய் நார்களில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. பின்னர் உடனடியாக நார்களை உலர்த்தும் எந்திரங்களில் பொருத்தப்பட்டிருந்த சிலிண்டர்களை அப்புறப்படுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து அவர்கள் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி மணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காற்று பலமாக வீசியதால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் பெருந்துறையில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் எந்திரங்கள் மற்றும் தேங்காய் நார், தேங்காய் மட்டைகள் என ஏராளமான பொருட்கள் எரிந்து முற்றிலுமாக நாசம் ஆனது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story