ரிஷிவந்தியம், அர்த்தநாரீஸ்வரர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை


ரிஷிவந்தியம், அர்த்தநாரீஸ்வரர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
x
தினத்தந்தி 9 Sept 2019 4:15 AM IST (Updated: 8 Sept 2019 9:57 PM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியத்தில் பிரசித்தி பெற்ற முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் பூஜை முடிந்ததும் அர்ச்சகர் சோமு, கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று மீண்டும் பூஜை செய்வதற்காக அதிகாலை 4 மணிக்கு கோவிலுக்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்குள்ள நடராஜர் மண்டபத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மண்டப கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

மேலும் கோவிலின் உள்பகுதியில் இருந்த பெரிய உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கொள்ளை சம்பவம் குறித்து ரிஷிவந்தியம் போலீசாருக்கு தகவல் தெரிவித் தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோவிலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அர்ச்சகர் கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் கோவில் சுற்றுச்சுவரில் ஏறி உள்ளே குதித்துள்ள னர். தொடர்ந்து நடராஜர் மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தியதோடு, அங்கிருந்த மண்டப கதவு பூட்டை உடைத்து கோவிலின் உள்பகுதிக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் உண்டியலை யாரேனும் உடைத்தால் ஒலி எழுப்பும் வகையில் வைக்கப்பட்டிருந்த அலாரத்தின் மின் ஒயரையும் துண்டித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த பெரிய உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணம் மற்றும் 2 இரும்பு வேல்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story