வினாடிக்கு 65,700 கனஅடி தண்ணீர் திறப்பால் காவிரி ஆற்றில் வெள்ள அபாயம்


வினாடிக்கு 65,700 கனஅடி தண்ணீர் திறப்பால் காவிரி ஆற்றில் வெள்ள அபாயம்
x
தினத்தந்தி 9 Sept 2019 4:15 AM IST (Updated: 9 Sept 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரத்து 700 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பால், காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 16 கண் மதகு பகுதியில் திறந்து விடப்படும் தண்ணீரை காண மேட்டூர் அணையில் சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர்.

மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் 2-வது முறையாக பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிரு‌‌ஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது.

இந்த நீர்வரத்தின் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து நேற்று முன்தினம் மதியம் அணை 120 அடியை எட்டி நிரம்பியது. இருப்பினும் 5-ந் தேதி இரவு முதலே 16 கண் மதகுகள் வழியாக காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 73 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்தது. அணை நிரம்பியதை தொடர்ந்து தண்ணீர் திறக்கும் அளவு நீர்வரத்தை பொறுத்து படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 65 ஆயிரத்து 700 கனஅடியாக தண்ணீர் திறக்கும் அளவு அதிகரிக்கப்பட்டது.

இதில் நீர்மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதமும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 700 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகின்றன. நேற்றும் இதே அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் அணைக்கு நேற்று தண்ணீர் வரத்து வினாடிக்கு 71 ஆயிரம் கனஅடியாக சற்று குறைந்துள்ளது. இருப்பினும் அணையில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரத்து 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. குறிப்பாக நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 120.80 அடியாக உயர்ந்தது.

இதனிடையே அணையில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரத்து 700 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளதால், காவிரி கரையோர மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணை நிரம்பிய தகவல் அறிந்ததும் விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து சேலம் மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் இருந்தனர்.

ஒரு சிலர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் நீராடி முனியப்ப சாமியை தரிசனம் செய்தனர். மேலும் சிலர் ஆடு, கோழிகளை பலியிட்டும், பொங்கல் வைத்தும், முனியப்பசாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அவர்கள் சமைத்த உணவை பூங்காவிற்கு எடுத்து சென்று சாப்பிட்டனர்.

16 கண் மதகுகளில் இருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறும் காட்சியை காண மேட்டூர் தங்கமாபுரி பட்டணம் புதுப்பாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக நின்று தண்ணீர் வெளியேறும் அழகை கண்டு ரசித்தனர். மக்கள் கூட்டம் அதிகரித்ததன் காரணமாக அந்த பாலத்தில் போக்குவரத்து ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. இதன்காரணமாக சேலம் கேம்ப்பில் இருந்து தங்கமாபுரி பட்டணத்துக்கு செல்ல மட்டும் கனரக, இலகுரக வாகனங்களை போலீசார் அனுமதித்தனர்.

சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன் தலைமையில் போலீசார் மேட்டூர் அணை, முனியப்பன் கோவில், பூங்கா, காவிரி பாலம், தங்கமாபுரி பட்டணம் புதுப்பாலம் உள்பட முக்கிய பகுதிகளில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story