ஓணம் பண்டிகையையொட்டி, தமிழக-கேரள எல்லையில் போலீசார் வாகன சோதனை
ஓணம் பண்டிகையையொட்டி போதை பொருட்கள் கடத்தலை தடுக்க தமிழக-கேரள மாநில எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்,
கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது, இந்த பண்டிகைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விளையும் காய்கறிகள் பெரும்பாலும் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதுபோல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக கேரள மாநிலத்திற்கு அனுப்பப்படுகின்றன.
இந்தநிலையில் தேனி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு உணவுப் பொருட்களுடன் மதுபானங்கள், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாகவும், ஓணம் பண்டிகையை பயன்படுத்தி இந்த கடத்தல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கடத்தல் சம்பவங்களை தடுக்க தேனி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையில் உள்ள லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதை, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து வாகனங்களில் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மறைத்து வைத்து கடத்தி செல்லப்படுகிறதா? என்று போலீசார் சோதனை நடத்துகின்றனர். அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story