கார்கள், மோட்டார் சைக்கிள் மோதல்: கேரள வாலிபர் உள்பட 4 பேர் பலி - வாடிப்பட்டி அருகே பரிதாபம்


கார்கள், மோட்டார் சைக்கிள் மோதல்: கேரள வாலிபர் உள்பட 4 பேர் பலி - வாடிப்பட்டி அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 12 Sep 2019 11:00 PM GMT (Updated: 12 Sep 2019 11:15 PM GMT)

வாடிப்பட்டி அருகே கார், மோட்டார் சைக்கிள் மீது கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு கார் மோதியதில் கேரள வாலிபர் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்துபோனார்கள்.

வாடிப்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சித்தூரை சேர்ந்தவர் பாண்டித்துரை(வயது 46), மர வியாபாரி. இவர் நேற்று வியாபாரம் தொடர்பாக மோட்டார் சைக்கிளில் மதுரை வந்தார். உடன் அதே ஊரை சேர்ந்த மலைச்சாமி(50) என்பவரும் வந்திருந்தார். வேலையை முடித்த பின்னர் அவர்கள் மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை பிரிவு அருகில் அவர்கள் சென்றபோது, பின்னால் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பாண்டித்துரையும், மலைச்சாமியும் தூக்கிவீசப்பட்டு உயிருக்கு போராடினர்.

மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது முன்னால் சென்ற மற்றொரு கார் மீது மோதியதுடன், சாலையின் தடுப்புச்சுவரில் மோதி நின்றது. இதில் மற்றொரு காரில் வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த டிரைவர் கிளார்(39) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்துபோனார். மேலும் அதில் பயணம் செய்த கேரள மாநிலம் முகமது அலி குடும்பத்தை சேர்ந்த சுபேர்(42), மஜூனு மன்து(40), நசாமுதீன்(28), சிபானா(18), சகானா(11) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த ஆந்திர மாநிலம் இந்துப்பூரை சேர்ந்த பழனிசாமி(41), சங்கீதா(22), பிரவீன்குமார்(14), கிரண்(8) ஆகியோரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிளில் வந்த மலைச்சாமி, காரில் வந்த கேரளாவை சேர்ந்த மஜூனு மன்து, நசாமுதீன் ஆகியோர் பரிதாபமாக இறந்துபோனார்கள். எனவே இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 4-ஆனது. காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story