ஐகோர்ட்டு இடைக்கால தடையால் அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பால பணிக்கு மீண்டும் சிக்கல்


ஐகோர்ட்டு இடைக்கால தடையால் அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பால பணிக்கு மீண்டும் சிக்கல்
x
தினத்தந்தி 13 Sept 2019 4:59 AM IST (Updated: 13 Sept 2019 4:59 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளதால் புதுச்சேரி அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை தொடருவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவை- விழுப்புரம் சாலை யிலுள்ள அரும்பார்த்தபுரத்தில் ரெயில்வேகேட் மூடப்படும் போது சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் இருந்து வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் ரூ.30 கோடி செலவில் பைபாஸ் சாலையை இணைக் கும் வகையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி நடந்து வந்தன. இதனால் புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்தன. இதனால் 7 ஆண்டுகள் ஆகியும் பாலம் முழுமையடையாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த மேம்பால கட்டுமானப் பணியுடன் தொடங்கிய நூறடி சாலை மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது. ஒருவழியாக மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இணைப்பு சாலை அமைக்கும்போது நில ஆர்ஜிதம் செய்வதில் பிரச்சினை எழுந்தது. நில உரிமையாளர்களிடம் நிலத்துக்குரிய இழப்பீடு வழங்குவதாக அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பணிகள் தொடராமல் முடங்கின.

இந்த மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் நமச்சிவாயம் முயற்சி மேற்கொண்டார். இதற்காக சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நிலத்திற்கான இழப்பீட்டு தொகை குறித்து இறுதி செய்து முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அதற்கான தொகையை இன்னும் 2 மாதங்களுக்குப் பின் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தடைபட்ட மேம்பால பணிகள் மீண்டும் தொடங்கி மின்னல் வேகத்தில் நடந்து வந்தன.

இந்தநிலையில் மேம்பாலம் மற்றும் புறவழிச்சாலை அமைக்க நிலம் அளித்த நில உரிமையாளர்கள் 9 பேர் சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அதில் ‘அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பால பணிக்காக எடுக்கப்பட்ட நிலத்திற்கான விலையை இன்னும் முடிவு செய்யவில்லை. அதனை நிர்ணயம் செய்து விட்டு மேம்பால பணியை தொடங்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அரும்பார்த்தபுரம் மேம்பால பணிகளை தொடர இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. ஏற்கனவே அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது ஐகோர்ட்டு விதித்துள்ள இடைக்கால தடையால் தொடர்ந்து பணிகளை மேற்கொள்வதில் மீண்டும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வில்லியனூர் தாசில்தார் மகாதேவனிடம் கேட்ட போது, ‘சென்னை ஐகோர்ட்டு விதித்துள்ள தடை குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்றார். பொதுப்பணிதுறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘நில உரிமையாளர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதற் காக பாலத்தை தாங்கும் தூண்கள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது’ என்றார்.

Next Story