சென்னையில் பெண் என்ஜினீயர் பலி: புதுச்சேரியில் அனுமதியின்றி பேனர்கள் வைக்க கூடாது - நாராயணசாமி எச்சரிக்கை


சென்னையில் பெண் என்ஜினீயர் பலி: புதுச்சேரியில் அனுமதியின்றி பேனர்கள் வைக்க கூடாது - நாராயணசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Sept 2019 5:35 AM IST (Updated: 14 Sept 2019 5:35 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலியானதையொட்டி புதுச்சேரியில் கொம்யூன் பஞ்சாயத்துகளின் அனுமதியின்றி பேனர்கள் வைக்க கூடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் ஒன்று சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் தகவல் தொழில்நுட்ப பணியாளர் சுபஸ்ரீ இறந்துவிட்ட செய்தியை அறிந்து மிகவும் மன வேதனையுற்றேன். அவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுச்சேரியின் முக்கிய பகுதிகளிலும் ஆங்காங்கே நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தின் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது காற்றுடன் மழை பெய்து வருவதால் இதுபோன்ற விபத்துகள் புதுச்சேரியிலும் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே எந்த பகுதியிலும் திருமணம், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட எத்தகைய நிகழ்வுக்கும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தின் அனுமதியின்றி பேனர்கள் வைக்கக்கூடாது என்று பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயத்துடன் இதுகுறித்து கலந்து ஆலோசித்து அவ்வாறு அனுமதியின்றி பேனர்கள் வைப்பவர்கள் மீது உள்ளாட்சித்துறை மூலமாக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளேன். எனவே அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்றுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்.

இல்லையென்றால் அவ்வாறு வைக்கப்பட்டுள்ள பேனர்கள் பொதுப்பணித்துறை, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் மூலமாக அகற்றப்பட்டு அதற்கான தொகை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூல் செய்யப்படுவதுடன் அவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதியப்பட்டு கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும். நம்முடைய நகரின் அழகினை சீர்குலைக்கும் இத்தகைய பேனர் கலாசாரத்தை புதுச்சேரியிலிருந்து அகற்றிட பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story