கொள்ளிடம் தண்ணீர் கடைமடை வரை வராததால் விவசாயிகள் தவிப்பு


கொள்ளிடம் தண்ணீர் கடைமடை வரை வராததால் விவசாயிகள் தவிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2019 11:00 PM GMT (Updated: 14 Sep 2019 4:44 PM GMT)

கொள்ளிடம் தண்ணீர் கடைமடை பகுதி வரை வராததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

கீரமங்கலம்,

கல்லணையில் இருந்து கடந்த மாதம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் வழக்கமாக திறக்க வேண்டிய 4 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் திறக்கப்படாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, தாலுகாக்களில் உள்ள கடைமடை பாசனத்திற்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக்களுக்கும் தண்ணீர் வராததால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு, நெய்வத்தளி, ஆயிங்குடி, நாகுடி வரை கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் வரும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், குறைந்த அளவு தண்ணீரே வந்ததால் அதனை பயன்படுத்தி விவசாயம் செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர்.

வீணாகும் தண்ணீர்

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், கொள்ளிடத்தில் திறக்கப்பட்ட தண்ணீர், கடைமடை பகுதி வரை வராததால் சுமார் 6 ஆயிரம் கண்மாய்கள் தண்ணீர் இன்றி உள்ளன. ஆனால், கொள்ளிடம் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இந்த தண்ணீரை கல்லணை கால்வாயில் திறந்துவிட்டு இருந்தால் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து இருப் பார்கள். மேலும் கல்லணை கால்வாயில் மராமத்து பணிகள் செய்யப்படாததால் செடி கொடிகளும், புயலில் சாய்ந்த மரங்களும் தண்ணீரின் வேகத்தை தடுக்கிறது.குறிப்பாக மேற்பனைக்காடு கிராமத்தில் இருந்து ஆயிங்குடி வழியாக நாகுடி செல்லும் கல்லணை கால்வாயில் அதிகளவு செடி, கொடிகள் இருப்பதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் வருவதற்கு முன்பாக இந்த செடி, கொடிகளை அகற்றி இருந்தால் தண்ணீர் தடையின்றி சென்று இருக்கும். 5 அடி உயரத்திற்கு குறையாமல் தண்ணீர் சென்றால் அனைத்து பாசன வாய்க்கால்கள் மூலம் விவசாயத்திற்கும், ஏரி, குளங்கள் நிரம்பவும் வசதியாக இருக்கும்.

மேலும் மும்பாலை ஏரி வரை தண்ணீர் செல் லும். ஆனால் 2 அடி அளவிற்கே தண்ணீர் செல்வதால் எந்த இடத்திலும் விவசாயம் செய்ய முடியாமலும், ஏரி, குளங்களில் நிரப்ப முடியாமலும் தண்ணீர் வீணாகி வருகிறது, ஆகவே, கடைமடை பகுதி வரை அதிகளவு தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story