புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,111 வழக்குகளுக்கு தீர்வு


புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,111 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 15 Sept 2019 4:15 AM IST (Updated: 14 Sept 2019 10:20 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,111 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர், திருமயம், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, இலுப்பூர் ஆகிய நீதிமன்றங்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகளை மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் தொடங்கி வைத்து விசாரணை மேற்கொண்டார்.

இதில் மகிளா கோர்ட்டு நீதிபதி ராஜலட்சுமி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை குற்றவியல் நீதிபதி சாந்தி, முதன்மை சார்பு நீதிபதி மகாலட்சுமி, நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதிகள் அறிவு, முனிக்குமார் மற்றும் வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1,111 வழக்குகளுக்கு தீர்வு

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5 ஆயிரத்து 267 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் வங்கிகளுக்கு வாராக்கடன் தொடர்பான 3 ஆயிரத்து 110 வழக்குகளில், 225 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 50 லட்சத்து 98 ஆயிரத்து 629-க்கு தீர்வு காணப்பட்டது. இதேபோல நீதிமன்ற நிலுவையில் இருந்த சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 157 வழக்குகளில் 886 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 30 லட்சத்து 66 ஆயிரத்து 528-க்கு தீர்வு காணப்பட்டது.

மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,111 வழக்குகளில் ரூ.3 கோடியே 81 லட்சத்து 65 ஆயிரத்து 157-க்கு தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலக ஓய்வுபெற்ற நிர்வாக உதவியாளர் தங்கராஜ் மாரியப்பன், முதுநிலை நிர்வாக உதவியாளர் ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story