பெலகாவியில் மழை வெள்ள பாதிப்பு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் பெங்களூருவில் எடியூரப்பா ஆலோசனை
பெலகாவியில் ஏற்பட்டு உள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்து, அந்த மாவட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் பெங்களூருவில் எடியூரப்பா நேற்று ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு,
பெலகாவியில் ஏற்பட்டு உள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்து, அந்த மாவட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் பெங்களூருவில் எடியூரப்பா நேற்று ஆலோசனை நடத்தினார். மந்திரி பதவி கிடைக்காததால் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் உமேஷ் கட்டி புறக்கணித்து விட்டார்.
கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) பெலகாவி, கதக், பாகல்கோட்டை உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
உமேஷ் கட்டி புறக்கணிப்பு
மழை பாதித்த மாவட்டங்களில் அரசு சார்பில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெலகாவி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரண பணிகள் மேற்கொள்வது குறித்தும் அந்த மாவட்டத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பெலகாவி மாவட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களான உமேஷ் கட்டி, பாலசந்திர ஜார்கிகோளி மற்றும் துணை முதல்-மந்திரியான லட்சுமண் சவதி கலந்துகொள்ளவில்லை. இவர்களில் பாலசந்திர ஜார்கிகோளி, லட்சுமண் சவதி ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதது பற்றி எடியூரப்பாவிடம் தகவல் தெரிவித்து இருந்தனர். ஆனால் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள உமேஷ் கட்டி இந்த கூட்டத்தை புறக்கணித்திருந்தார். அவர், எடியூரப்பாவிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
நிதி ஒதுக்கப்படும்
இந்த ஆலோசனை கூட்டத்தில் பெலகாவியில் மழையால் பாதித்த மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கும்படி எம்.எல்.ஏ.க்களுக்கு எடியூரப்பா உத்தரவிட்டார். அதே நேரத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிகமாக ஷெட்கள் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும் எம்.எல்.ஏ.க்களிடம் அவர் கூறினார்.
மேலும் வீடுகளை இழந்தவர்கள், புதிதாக வீடு கட்ட தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்பதை மக்களிடம் தெரிவிக்கும்படியும் எம்.எல்.ஏ.க்களிடம் எடியூரப்பா கூறினார். அத்துடன் தொகுதி வளர்ச்சி மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று எம்.எல்.ஏ.க்களிடம் எடியூரப்பா உறுதி அளித்தார்.
வேறு காரணம் தேட...
ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மந்திரி சசிகலா ஜோலே நிருபர்களிடம் கூறுகையில், “பெலகாவியில் மழைபாதிப்புகள் குறித்தும், நிவாரண பணிகளை மேற்கொள்வது குறித்தும் எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். எம்.எல்.ஏ.க்கள் கூறிய குறைகளையும் அவர் கேட்டு அறிந்து கொண்டார். தொகுதியில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் எடியூரப்பா உறுதி அளித்துள்ளார்.
பெலகாவி சுவர்ணசவுதாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) நடைபெற உள்ள சட்டசபை கூட்டம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. சட்டசபை கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி எம்.எல்.ஏ.க்களுக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் உமேஷ் கட்டி சொந்த காரணங்களுக்காக கலந்து கொள்ள முடியவில்லை. அதற்கு வேறு காரணம் தேட வேண்டிய அவசியமில்லை“ என்றார்.
Related Tags :
Next Story