கரூரில் ரூ.7 கோடியில் குளங்கள் தூர்வாரும் பணி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்


கரூரில் ரூ.7 கோடியில் குளங்கள் தூர்வாரும் பணி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 14 Sep 2019 11:00 PM GMT (Updated: 14 Sep 2019 7:11 PM GMT)

கரூரில் ரூ.7 கோடியில் குளங்கள் தூர்வாரும் பணி நடக்கிறது என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்,

கரூர் நகராட்சிக்குட்பட்ட ராமானூர், அருணாசலம் நகர், பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின்கீழ் கரூர் மாவட்டத்தில் இதுவரை 32 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்படும் மனுக்களில் அதிக அளவு முதியோர் உதவித்தொகை கோரி மனு கொடுத்திருக்கின்றனர். அவர்களுக்கு உதவித்தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கரூர் நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகள் மூன்று மாதத்தில் முடிவுற்று குடிநீர் இணைப்புகள் பெற்றுள்ள அனைத்து வீடுகளுக்கும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் வழங்கப்படும்.

அடுத்த வாரத்தில் குளத்துப்பாளையம் குகை வழிப்பாதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது.கரூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள், கிராம பகுதியில் உள்ள 67 சிறு பாசனக்குளங்கள் மற்றும், 367 குளங்கள் மற்றும் குட்டைகள் தூர்வார ரூ.7 கோடியே 2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

மரக்கன்றுகள் நடவு...

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் அவர்களின் ஒப்புதலுடன் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடைசெய்யப்பட்டுள்ளது. இதை பார்த்து தேசிய அளவில் சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story