மக்கள் நீதிமன்றத்தில் 2,959 வழக்குகளுக்கு தீர்வு ரூ.6½ கோடி இழப்பீடு வழங்க உத்தரவு


மக்கள் நீதிமன்றத்தில் 2,959 வழக்குகளுக்கு தீர்வு ரூ.6½ கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
x
தினத்தந்தி 14 Sep 2019 10:30 PM GMT (Updated: 14 Sep 2019 7:55 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 959 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.6 கோடியே 51 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 959 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.6 கோடியே 51 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மக்கள் நீதிமன்றம்

தேசிய ஆணைக்குழு சார்பில் 3-வது மக்கள் நீதிமன்றம் நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் நெல்லையில் 9 அமர்வுகளும், புறநகரான தென்காசி, அம்பை, சங்கரன்கோவில், வள்ளியூர், நாங்குநேரி, சேரன்மாதேவி, சிவகிரி, செங்கோட்டை, ஆலங்குளம் ஆகிய ஊர்களில் 16 அமர்வுகளும் அமைக்கப்பட்டு இருந்தன. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 25 அமர்வுகள் அமைக்கப்பட்டு இருந்தன.

நெல்லையில், மக்கள் நீதிமன்றத்தை நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது தொடங்கி வைத்தார். நீதிபதிகள் சுபாதேவி, அருள்முருகன், விஜயகாந்த், சந்திரா, இந்திராணி, ரவிசங்கர், வஷீத்குமார் ஆகியோர் தலைமையில் அமர்வுகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் வாகன விபத்து வழக்கு, காசோலை மோசடி, ஜீவனாம்ச வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கோர்ட்டில் தாக்கல் செய்யாத வழக்குகளும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

2,959 வழக்குகளுக்கு தீர்வு

கோர்ட்டில் நிலுவையில் உள்ள 5,517 வழக்குகள் விசாரணைக்கு எடுத்த கொள்ளப்பட்டன. இதில் 2,824 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இழப்பீடாக ரூ.5 கோடியே 13 லட்சத்து ஆயிரத்து 480 வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கோர்ட்டில் தாக்கல் செய்யப்படாத 175 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதில் 135 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இழப்பீடாக ரூ.1 கோடியே 38 லட்சத்து 72 ஆயிரத்து 447 வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மொத்தம் 5,692 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதில் 2,959 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. ரூ.6 கோடியே 51 லட்சத்து 73 ஆயிரத்து 927 இழப்பீடாக வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏற்பாடுகளை மக்கள் நீதிமன்ற நீதிபதி சுபாதேவி, சட்ட உதவி மைய நீதிபதி வஷீத்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

Next Story